ஜி.எஸ்.டி. சிறு, குறு வணிகர்களை பாதிக்கும்: மதுரை மக்களவை உறுப்பினர் கருத்து

ஜிஎஸ்டி என்பது நாட்டிலுள்ள சிறு குறு வணிகர்கள் மீது நச்சுப் புகையை செலுத்துவது போன்ற விஷயம் என்றார் எம்பி.சு.வெங்கடேசன்

Update: 2022-05-06 09:30 GMT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜாவெள்ளையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

ஜிஎஸ்டி என்பது இந்தியாவில் உள்ள சிறு குறு வணிகர்கள் மீது நச்சுப் புகையை செலுத்துவது போன்ற விஷயம் என்றார் மதுரை எம்பி.சு.வெங்கடேசன். 

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக வணிகர் தின விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.மேலும், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில்,  மதுரை  எம்பி சு.வெங்கடேசன்  பேசியதாவது :மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு, தமிழகத்தில் ஏற்கெனவே 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது .மேலும் ஒன்று தரமுடியாது என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்தார். இந்தியாவில் 20 மாநிலங்களில் கொடுக்கப்படும் ஜிஎஸ்டி வரியை தமிழ்நாடு மட்டும் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் 4 அல்ல 14 பன்னாட்டு விமான நிலையங்கள் கேட்டாலும் கொடுக்க வேண்டும்.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவித்தால், தமிழகத்தில் வணிக வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரிக்கும். ஜிஎஸ்டி என்பது இந்தியாவில் உள்ள சிறு குறு வணிகர்கள் மீது நச்சுப் புகையை செலுத்துவது போன்ற விஷயம் என்றார் வெங்கடேசன் எம்பி.

இதையடுத்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜாவெள்ளையன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ஜிஎஸ்டி அறவே கூடாது என்று நாங்கள் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அமேசான், பிளிப்கார்ட் தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த படியாக லூலூ கால் பதித்து வருகிறார்கள்.இதனால், நிச்சயமாக சிறு குறு வணிகர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவார்கள். கடந்த 3ஆண்டுகளாக கொரோனாவால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வியாபாரிகளும் முன்களப்பணியாளர்களாக கருதப்படவேண்டும். கொரோனாவில், உயிரிழந்த முன்கள பணியாளர் களுக்கு நிவாரண உதவி அளித்ததை போல வணிகர் சங்க வியாபாரிகளுக்கும் அளிக்கவேண்டும். மத்திய அரசாங்கம் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைத்தால் தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிச்சயமாகக் குறையும் என்றார் அவர்

Tags:    

Similar News