மதுரையில் மாற்றுத்திறனாளி மீது 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்: கிரைம் செய்திகள்
மதுரையில் மாற்றுத்திறனாளி மீது 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
மதுரை சிந்தாமணி, இந்திரா நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் தினேஷ் (வயது 21). இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். தினேஷுக்கு காது கேட்காது, வாயும் பேச முடியாது. இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு சிந்தாமணி மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது சின்ன கடை அருகே 4 பேர் கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இது தொடர்பாக தினேஷ் தாய் பன்னீர்செல்வி, கீரைத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் தினேஷ் மாற்றுத்திறனாளி என்பதால், அவர் ஏதேனும் கருத்து தெரிவிக்க, சத்தமாக கூச்சல் போடுவது வழக்கம். இதனால் ஆத்திரம் அடைந்து 4 பேர் கும்பல் தாக்கியதா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், அங்கயற்கன்னி தெருவை சேர்ந்த பழனிகுமார் மகன் பாலக்குமார் (வயது 21). இவர் நேற்று அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது இதே பகுதியில் வசிக்கும் பிரபல ரவுடி ஆட்டு கார்த்திக் என்பவர் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. எனவே மிகுந்த மனவேதனை அடைந்த பாலகுமார் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் கூலி தொழிலாளி கீழே விழுந்து உயிரிழப்பு
மதுரை கரிமேடு, இளந்தோப்பு தெருவை சேர்ந்தவர் குமரேசன் (வயது 45). கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி சித்தாரா உள்ளார். குமரேசனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார்.
அடுத்த நாள் காலை 5 மணி அளவில் படுக்கையில் இருந்து எழுந்த குமரேசன், மாடி படிக்கட்டில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் வழியிலேயே குமரேசன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் நிறுத்தி இடையூறு செய்த பெண் கைது
மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த வடிவேல் மனைவி நந்தினி (வயது 30). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஆர்.ஆர். மண்டபத்துக்கு வந்தார். அப்போது நடு ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மதிச்சியம் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்குவரத்து இடையூறு விளைத்ததாக, நந்தினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
மதுரை ஜம்புராபுரத்தை சேர்ந்தவர் உமேஸ் (வயது 31). இவர் நேற்று இரவு வீட்டின் முன்பாக, மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து இருந்தார். அதன் பிறகு அவர் வீட்டுக்குள் சென்று படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் உமேஷ் இன்று அதிகாலை 2 மணி அளவில் சிறுநீர் கழிப்பதற்காக படுக்கையில் இருந்து எழுந்து வந்தார். அப்போது யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரிய வந்தது. எனவே உமேஷ் சத்தம் போட்டார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து, அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து, தல்லாகுளம் போலீசில் ஒப்படைத்தனர்.
எனவே அந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர் திண்டுக்கல் மாவட்டம், கேசவனம்பட்டி, கீழத் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சிவகுமார் (வயது 19) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உமேஷ் மோட்டார் சைக்கிளை திருட முயன்றதாக, தல்லாகுளம் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் சிவகுமாரை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
மதுரை செல்லூர் போலீசார் நேற்று 60 அடி ரோடு, தேவர் சிலை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். எனவே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர் செல்லூர், நாயக்கர் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஜட்டி குமார் (வயது 52) என்பது தெரிய வந்தது. எனவே அவரிடம் போலீசார் சோதித்து பார்த்தனர். இதில் 4.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த செல்லூர் போலீசார், கஞ்சா விற்றதாக ஜெயக்குமாரை கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வைகை தென்கரை, மீன் கடை முன்பாக, 100 கிராம் கஞ்சாவுடன் நெல்பேட்டை, நாகூர் தோப்பு, ஷேக் அப்துல்லா (வயது 40) என்பவரை மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.