மதுரையில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு: எம்.பி. துவக்கம்
மதுரையில் மாற்றுத்திறனுடைய இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு. சு.வெங்கடேசன் எம்.பி துவக்கி வைத்தார்.
மாற்றுத்திறனுடைய இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்துவதன் முதற்கட்டமாக காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மாணவர்களுக்காக சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி புரோபேசனரி ஆபிசர்ஸ் காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேர்விற்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் இணைந்து நடத்தும் இணையதள சிறப்பு இலவச பயிற்சி வகுப்பினை இன்று காணொளி வாயிலாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் துவக்கி வைத்தார்.
கூட்டத்தில், மாற்றுத்திறனுடைய (காது கேளாதோர்) மாணவர்கள் 47 பேர் காணொளியில் கலந்து கொண்டனர். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மேற்கண்ட போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்வதற்கு வழி காட்டும் நிகழ்வாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதே போல் இனி வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி, எஸ்.ஆர்.பி. எஸ்.எஸ்.சி. போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் என்.மகாலெட்சுமி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் ஸ்டாலின், நாகராஜ், வீரமணி மற்றும் பாலமுருகன் ஆகியோர் பங்கெடுத்தனர்.