மதுரை திருமங்கலம் அருகே கண்மாய் நிரம்பி வெளியேறும் உபரி நீரால் விவசாயிகள் அவதி

கனமழை காரணமாக வரத்து கால்வாய் வழியாக மழை நீர் விவசாய நிலத்திற்குள் சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தியது

Update: 2021-11-18 14:15 GMT

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கண்மாய் நிரம்பியதால் வெளியேறிய நீர் நெல் வயலுக்குள் புகுந்தது.

திருமங்கலம் அருகே 25 ஆண்டுகளுக்குப் பின்பு   கண்மாய்  நிரம்பி வெளியேறும் உபரி நீர் கால்வாய் தூர் வாரததால்  வயல்வெளியில் புகுந்து  பயிர்கள்  சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்பு பெய்த மழையால் கண்மாய் நிறைந்து  உபரி நீர் வெளியேறி வருகிறது. முறையாக கண்மாய் தூர் வாராததால் உபரி நீர் வயலுக்குள் பாய்ந்து பயிர்கள் நீரில் மூழ்கியது. திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டுநாழிபுதூர் கிராமத்தில் 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது.இந்த கண்மாய் மூலம் கிராமப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில்,  திருமங்கலம் பகுதியில் ஏழு சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இந்நிலையில், எட்டுநாழிபுதூர் கண்மாயில் பல்வேறு பகுதியில் இருந்து நீர்வரத்து மூலம் கண்மாய் நிறைந்து  உபரி நீர் வெளியேறுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கண்மாய் முறையாக தூர்வாரப்படாததால் கண்மாய் முழுமையாக நிறையவில்லை. கண்மாயில் உள்ள ஷட்டர் பராமரிக்கப்படாததால்,  தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது. நீர்வரத்து கால்வாயை ஒட்டிய விவசாய பகுதியில் வெங்காயம், கத்தரிக்காய், தக்காளி, வாழை, மிளகாய் உள்ளிட்டவைகள்  பயிரிடப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக நீர் வரத்து கால்வாய் வழியாக மழை நீர் விவசாய நிலத்திற்குள் சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. நீரில் மூழ்கிய பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.ஒரு லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளதாகவும், மழை பெய்து மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும் மழை வெள்ளத்தால் பயிர்கள் நீரில் மூழ்கியதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News