சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பது திமுக தான்
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த இறுதி முடிவை தேசியத் தலைவர் அறிவிப்பார்;
சிறுபான்மையினருக்கு என்றும் திமுக தான் ஆதரவாக இருக்கிறார்கள் என்றார் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் சூசைராஜ்.
மதுரையில் தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி, அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் மற்றும் ஆதி திராவிட கிறிஸ்தவர் கூட்டமைப்பு சார்பில் சமூக சமய நல்லிணக்க விழா மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் சூசைராஜ் தலைமை தாங்கி சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்கள் ஆண்கள் மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் செபாஸ்டின் சூசைராஜ் கூறியதாவது: தேசிய சிறுபான்மை மக்கள் கட்சியின் முக்கியமானது கோட்பாடு சமூக சமய நல்லிணக்கத்தை வளர்ப்பதே ஆகும். இதற்கு ஒத்துழைப்பு கொடுக்கின்ற பல்வேறு அரசியல் கட்சி இருந்தாலும், ஆரம்ப காலம் தொட்டு சிறுபான்மை நலனுக்காக தற்போது வரை திராவிட முன்னேற்ற கழகம்தான் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த இறுதி முடிவை தேசியத் தலைவர் அறிவிப்பார். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் நாங்கள் ஓங்கி குரல் கொடுத்து வருகிறோம் என்றார் அவர்.
விழாவில் ,தேசிய சிறுபான்மை மக்கள் இயக்க கட்சி மாவட்டச்செயலாளர் அன்புச்செல்வன், ஏதேன் மறை மாவட்ட நிர்வாகி கிறிஸ்டி ஜோதி கிருபா பாய், ஆங்கிலிகன் சபை பிஷப் ராஜாஜி சாமுவேல், மக்கள் மேம்பாட்டு கழக பொருளாளர் நளினி, சிறு வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆனந்த், விசிக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள் ஜோசப், திமுக மாநில விவசாய தொழிலாளர் அணியின் இணைச் செயலாளர் பாக்கியநாதன், தமிழக கிறிஸ்துவ திருச்சபைகள் கூட்டமைப்பின் தலைவர் அலெக்ஸாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.