மதுரை அருகே தோப்பூரில் மாயமாய் மறைந்த கொரோனா கேர் சென்டர்: பொதுமக்கள் அவதி
கடந்த இரு தினங்களில் இரவோடு இரவாக காணாமல் போன தோப்பூர் கொரோனா கேர் சென்டர்? பொதுமக்கள் அவதி;
கொரோனா 2-ம் அலை மிக தீவிரமாக பரவி வந்த கட்டத்தில், தமிழகம் முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. குறிப்பாக, மையங்கள் அமைத்து சிறப்பாக செயல்பட்டது. பல தனியார் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் முன் வந்து ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்க உதவினர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸினால் 2-ம் அலை தாகத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், மதுரை மாவட்டத்திலும் மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில், கொரோனாவால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1500 மேலாக உயர்ந்தது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு இடங்களில் கொரோனா கேர் சென்டர் மையங்களில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் நிரம்பி மற்ற நோயாளிகளுக்கு ஆக்சன் கிடைக்காமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதன் தொடர்ச்சியாக, மதுரையில் நோய்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், மதுரை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய திறந்த வெளி கொரோனா கேர் சென்டர் அமைக்க திட்டமிட்டு, ருபாய் 1 கோடி செலவில் 300 படுக்கைகள் அமைக்கப்பட்டு கடந்த மே மாதம் 21-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து திறந்து வைத்தார்.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை முடிந்த நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததும் நேற்று மற்றும் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அந்த திறந்த வெளி கொரோனா தடுப்பு முகாமினை அகற்றியுள்ளனர். முகாமினை, அகற்றியதனால் திறந்த வெளி மைதானம் போல் காட்சியளிக்கிறது.
தற்போது கொரோனா 3-ம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதனால், நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மூன்றாம் அலையில் டெல்டா வகை வைரஸின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என மருத்துவர்கள் கணித்த நிலையில், முன்னெச்சரிகையாக இந்த முகாமினை பராமரித்து வராத நிலையில், அவசர அவசரமாக இந்த முகாமினை ஏன் அகற்ற வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.
மேலும், கொரோனா 2- ம் அலையில் ஆக்ஸிஜன் குறைபாட்டினை தவிர்க்க முடியாமல், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு 1 கோடி ருபாய் செலவில் அமைத்து திறந்த வெளி கொரோனா தடுப்பு முகாமினை இரண்டே மாதத்தில் மூடுவது கொரோனா தொற்றிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு வெறும் கண்துடைப்பாகவே உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
தற்போது 3-ம் அலையிலும் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் 1 கோடி ருபாய் செலவு செய்து மீண்டும் திறப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இதுகுறித்து கேட்டபொழுது, அமைக்கப்பட்ட திறந்த வெளி அரங்கத்திற்கு வாடகை செலுத்த முடியாத காரணத்தினாலே, அகற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறினர்.