மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு மேற்காெண்டார்.;
மதுரை மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.55 கிருஷ்ணாராயர் தெப்பக்குளம் கிழக்குத் தெரு, கிருஷ்ணாராயர் தெப்பக்குளம் வடக்குத் தெரு, கொடிக்காலக்கார கிழக்குத் தெரு, போலீஸ் ஸ்டேசன் மேலத் தெரு, கனகவேல் காலனி ஆகிய தெருக்களில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.53.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம், சாலையின் அளவு உள்ளிட்ட சாலைப்பணிகள் குறித்து ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். புதிதாக சாலைகள் அமைக்கப்படும் போது பழைய சாலைகளை அரசின் வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும். மேலும், மழைக் காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்காமல் எளிதில் வழிந்தோடி செல்லும் வகையில் சாலைகளை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நகரப்பொறியாளர் லெட்சுமணன், உதவி ஆணையாளர் மனோகரன், உதவிப் செயற்பொறியாளர் அய்யப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப் பொறியாளர்கள் துர்காதேவி,சரவணன், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.