மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் தலைவர்கள் விழாவிற்கு தடை கோரி வழக்கு
மதுரை:
மதுரை அரசு சட்டக் கல்லுாரிக்கு முன் சமூக அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழனன்று உத்தரவிட்டது.
உசிலம்பட்டி சூர்ய பாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் படித்தேன். கல்லுாரிக்கு எதிரே 3 பகுதிகளை இணைக்கும் சாலைகள் உள்ளன. இதை ஆக்கிரமித்து படிக்கும் மாணவர்களில் சிலர் தலைவர்களின் பிறந்தநாள் விழா, மற்றும் பொது விழாவிற்கு பிளக்ஸ் போர்டுகள் வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெருமை பேசும் பாடல்களை ஒலிக்கவிடுகின்றனர்.
அப்பகுதியில் வெடிகளை வெடிக்கச் செய்கின்றனர். இதனால் இரு பிரிவு மாணவர்கள் மோதிக் கொள்கின்றனர். வகுப்பில் மாணவர்கள் பாடத்தை கவனிக்க முடியாமல் இடையூறு ஏற்படுகிறது. இக்கல்லுாரிக்கு முன் சமூக அல்லது அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கக்கூடாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு போலீஸ் கமிஷனர், கல்லுாரி முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஆக.,29 க்கு ஒத்தி வைத்தது.