மதுரை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: குளிர்பானங்களை அள்ளிச்சென்ற மக்கள்
சுங்க சாவடி அருகே திடீரென டயர் வெடித்த காரணத்தால் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது;
வளையங்குளம் சுங்கச்சாவடி அருகே நிலைத்தடுமாறி கவிழ்ந்த சரக்கு வாகனம் சாலையில் சிதறி கிடந்த குளிர்பானங்களை அள்ளிச் சென்ற பொதுமக்கள்
மதுரை வள்ளாலப்பட்டி பகுதியில் இருந்து, திருமங்கலம் நோக்கி குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் வலையங்குளம் சுங்க சாவடி அருகே திடீரென டயர் வெடித்ததால் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில், சரக்கு வாகனத்தில் இருந்து பறந்து சென்ற டயர் எதிரே வந்த லாரி மீது மோதிய நிலையில் முன்பக்க கண்ணாடி உடைந்து ஓட்டுநர் சிறிது காயத்துடன் உயிர் தப்பினார்.குளிர்பான சரக்கு வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் பூஞ்சோனை லேசான காயங்களுடன் அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிலர் சாலையில் கொட்டிக்கிடந்த குளிர் பான பாட்டில்களை பைகளில் அள்ளிச்சென்றனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரக்கூடிய நிலையில்,கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான சரக்கு வாகனம் அப்புறப்படுத்தப்பட்டது.