மதுரையில் ,பாஜக திருச்சி சூர்யா பேட்டி:

பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால், நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். -திருச்சி சூர்யா பரபரப்பு பேட்டி.

Update: 2024-06-11 14:24 GMT

பாஜக திருச்சி சூர்யா

மதுரை.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை, மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா வாழ்த்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சூர்யா கூறுகையில்:

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டலத்தில் அதிக வாக்குகளை இந்த மண்டலத்தின் தலைவர் கருப்பையா பெற்று இருக்கிறார். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்ற திராவிட கட்சிகளின் கொள்கைக்கு அப்பாற்பட்டு பணமில்லாமல் தேர்தலை சந்திப்போம் என்கிற முடிவை எங்கள் மாநில தலைவர் எடுத்தார். அதற்கான ஆதரவை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதற்காக உழைத்த கட்சி நிர்வாகிகளின் இல்லங்களில் சென்று அவர்களை சந்தித்து வருகிறோம்.

மத்திய அமைச்சரவையில் தமிழர்கள் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு:

இது போன்ற வருத்தங்கள் உள்ள மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். இதுவரை ஆதரவு கொடுக்கவில்லை என்றாலும் மூன்று பேர் மத்திய அமைச்சராக உள்ளனர், மூன்று பேர் ஆளுநர்களாக உள்ளனர். மக்கள் பாஜக பிரதிநிதியை நேரடியாக தேர்ந்தெடுத்த அனுப்பினால் நிச்சயம் மாநில தலைவர் பிரதமரிடம் கேட்டு அமைச்சரவையில் இடம் பெற்றுத்  தருவார்.

தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகம் பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு:

எங்கள் எண்ணம் வருகின்ற 2026 மாநிலத்தை ஆள வேண்டும் என்பது மட்டுமே. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் ஆதரவுடன் தான் பயணிக்க முடியும் என்பதை நாங்கள் முதன்முதலாக உடைத்து இருக்கிறோம். பெரிய சாம்ராஜ்யமான அதிமுக பல இடங்களில் தடம் தெரியாமல் போய்விட்டது, சில இடங்களில் இன்று டெபாசிட் இழந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பாஜகவால் தோல்விகள் அதிகமாகிறது, சிறுபான்மையினர் வாக்கு குறைகிறது என்று சொன்ன அதிமுக, இப்போது கூட்டணி பிரிந்த பிறகு கீழே சென்றுள்ளார்கள் என்று பார்த்தால் அதிமுகவை விட தமிழகத்தில் பாஜக செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. 2024 அதிமுகவை பின்னுக்கு தள்ளி இருக்கிறோம், 2026 திமுகவை பின்னுக்கு தள்ளி ஆட்சிக்கு வருவோம்.

பாஜக வாக்கு சதவீதம் அதிமுகவை தான் பாதிக்கும் திமுகவை பாதிக்காது என்ற கேள்விக்கு:

திமுக மீது மக்கலுக்கு அதிருப்தி இருப்பதால் தான் எட்டு சதவீத வாக்கு வங்கி இழந்திருக்கிறார்கள். அதிமுகவை சார்ந்த ஆதரவுகள் சீமானுக்கு கூட சென்றுள்ளது. திமுகவிற்கு எதிரான கட்சி அதிமுகவா பாஜகவா என்கிற குழப்பம் இருந்த நிலையில்,  இந்த தேர்தல் முடிவின் மூலம் பாஜக தான் 2026இல் திமுகவை எதிர்க்க சரியான கட்சி என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பேசிய ஆடியோ வெளியானது குறித்த கேள்விக்கு:

இந்து மக்கள் கட்சி பாஜகவுடன் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. இந்து மக்கள் கட்சிக்கு பாஜக சப்ப கட்டு கட்ட வேண்டிய அவசியம் இல்லை. சித்தாந்த ரீதியாக ஒன்று பட்டிருந்தாலும் அரசியல் ரீதியாக வெவ்வேறு சித்தாந்தங்கள் உள்ளது.

வாக்கு சதவீதம் குறைந்தாலும் திமுக 40 தொகுதிகளில் வென்றது குறித்த கேள்விக்கு:

நீட்டை ரத்து செய்வதாக கூறினார்கள் செய்யவில்லை, மத்திய அரசை குறை சொல்லி மட்டும்தான் ஆட்சி நடத்தினார்களே தவிர, உரிமையைக் கூறி வாங்கக் கூடிய தகுதி அவர்களுக்கு இல்லை. 40 தொகுதியில் ஜெயித்ததால் நல்ல ஆட்சி நடப்பதாக நினைக்கிறார்கள்.2026 மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

தென்னிந்தியாவில் வாக்கு சதவீதம் அறிகுறித்தாலும் வட இந்தியாவில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது குறித்த கேள்விக்கு:

36 கட்சிகள் சேர்ந்து ஒருவரை காலி செய்ய முயற்சிக்கிறார்கள். அயோத்தியில் ராமரை பிரதிஷ்டை செய்வதற்காக வைத்தோமே தவிர மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று செய்யவில்லை. இவிஎம்மில் கை வைப்பதாக குற்றச்சாட்டு உண்மை என்றால் பல இடங்களில் பெருவாரியாக வெற்றி பெற்று இருப்போம். கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றாலும், தற்போது பல இடங்களில் நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

பாஜக நிர்வாகிகலுக்கு குற்ற பின்னணி உள்ளது என்று தமிழிசை கூறியுள்ளது குறித்து கேள்விக்கு:

நான் திமுகவில் இருந்த போது எனது மகன் பிறந்த நாளுக்கு தமிழிசை அக்கா வந்துள்ளார்கள். தனிப்பட்ட முறையில் என்மீது பாசமானவர். ஆனால் , கட்சி ரீதியாக பார்த்தால் அவர் தலைவராக இருக்கும்போது நான் பாஜகவிற்கு வரவில்லை. அவரைப் பரட்டை என்று கூறிய போது, அவருக்கு கோபம் வந்தது.

ஆனால், அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதை திமுகவினர் திட்டியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால், நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை அப்படி இருந்தாலும் அது முன்னாள் இருந்த தலைவர்களால் தான் இருக்கும். ஆனால், சம்பந்தமில்லாமல் எங்கள் தலைவரை குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் அப்படி பதிவிட்டேன்.

அடுத்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை என்பதால் தான் இந்த பிரச்சனையா என்ற கேள்விக்கு:

2027 வரை அண்ணாமலை தான் மாநிலத் தலைவராக தொடர்வார். 2026 இல் முதல்வராவார்.

மதுரையில் பாஜக வேட்பாளர் சரியாக வேலை பார்க்கவில்லை என்ற கேள்விக்கு:

ஏற்கனவே அவருக்கும் எனக்கும் வாய்க்காத் தகராறு உள்ளது. மதுரையை பொருத்தவரையில் நல்ல வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். களத்தில் இறங்கி வேலை பார்த்ததால் தான் இந்த வாக்குகள் கிடைத்தது, வரக்கூடிய நாட்களில் அனைத்து தொகுதிகளிலும் இது வேலைகள் நடைபெறும் என, கூறினார்.

Tags:    

Similar News