மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர பேருந்துகள்..!

மதுரை அரசு போக்குவரத்து நகர பேருந்துகளின் உள்ளே படுமோசமாக இருப்பதால் எப்போது என்ன கழண்டு விழும் என்ற அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-02 08:44 GMT

அரசு நகர பேருந்து (கோப்பு படம்)

 மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பணிமனையில்  இருந்து இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள் பெரும்பாலும் மழைக் காலங்களில் பேருந்து உள்ளே அருவி போல மழைநீரானது கொட்டுகிறது. வீட்டில் குளிக்காமல் வரும் பயணிகள் அந்த அருவி நீரில் குளித்து மகிழலாம். 

ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. பேருந்துக்குள் ஏறும்போது கையில் அல்லது பையில் பணம் அல்லது வேறு எந்த முக்கிய பொருளும் வைத்திருக்கக்கூடாது. அதற்கு அரசு பொறுப்பேற்காது. இதை ஏதோ நகைச்சுவைக்காக சொல்வதாக எண்ணிவிடாதீர்கள். இன்றைய பயணத்தில் நீங்களும் அந்த நகர பேருந்துகளில் பயணம் செய்தால் உங்களுக்கு அந்த நிலை புரியும்.

நகர பேருந்துகளில் ஏறி பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மதுரையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளிலும் இதே நிலைதான். மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், செக்கானூரணி, மேலூர், திருமங்கலம், மதுரை புதூர், எல்லீஸ் நகர், ஆகிய பணிமனைகளில்  இருந்து அரசு நகரப் பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும், பேருந்துகளில் மழைக்காலங்களில் பயணிகள் அமருகின்ற இருக்கை மீது குற்றால அருவி போல மழைநீர் கொட்டுகிறது.

இதனால், பேரூந்துக்குள்ளேயே  பயணிகள், குடையைப் பிடித்துக் கொண்டு அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், பொதுமேலாளர், கோட்ட மேலாளர், கிளை மேலாளர் ஆகியோர்களுக்கு பயணிகள் சார்பில், புகார்கள் தெரிவித்தும், அரசு பஸ்சில் தொடரும் இந்த அவலங்கள் தீர்ந்தபாடில்லை என்று  பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனயிலிருந்து, மதுரையிலிருந்து, கருப்பட்டி, குருவித்துறை, நாச்சிகுளம் போன்ற ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு நகர பேருந்துகளில் இருக்கைகள், ஜன்னல்கள் என அனைத்துமே மோசமான நிலையில் உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால்தான் இந்த நிலை ஏற்படுகிறது.

தனியார் பேருந்துகள் பராமரிக்கப்படுவதுபோல அரசு பேருந்துகளை ஏன் பராமரிப்பதில்லை. நமது வரிப்பணத்தில் வாங்கப்படும் அரசு பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கானது. அவைகளை முறையாக நிர்வாகம் செய்யவே அரசு பணியாளர்களை நியமனம் செய்கிறது. அந்த வெளியை அவர்கள் ஒழுங்காக செய்யாமல் சம்பளம் மட்டும் எப்படி வாங்கலாம்? 

அதிகாரிகள் பேருந்துகளை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News