மதுரையில் விழிப்புணர்வு பெருந்திரள் கூட்டம்: அமைச்சர் தொடங்கி வைப்பு
மதுரை மாவட்டம் உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ஐ முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது;
மதுரை மாவட்டம் ,உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ஐ முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பெருந்திரள் கூட்டத்தில் ரூ.1660.15 கோடி மதிப்பீட்டில் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டன.சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ஐ முன்னிட்டு மதுரை மடீட்சியா அரங்கில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக,
நடைபெற்ற விழிப்புணர்வு பெருந்திரள் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், முன்னிலையில் ரூ.1660.15 கோடி மதிப்பீட்டில் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு மாநிலம் 2030-ஆம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காக கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, சென்னையில் வருகின்ற ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 நடைபெற உள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறிய பல்வேறு நாடுகளிலும் நமது நாட்டின் இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் எந்தவொரு தொழில் நிறுவனத்திற்கும் தேவையான மனித வளம் போதிய அளவில் உள்ளது. இந்த மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கு கல்வி பயிற்சி, தொழில் திறன் பயிற்சி போன்றவை மிக இன்றியமை யாததாக உள்ளது. இத்தகைய முன்னெடுப்புகளில் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் “நான் முதல்வன்“ போன்ற திட்டங்கள் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.
நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை கருத்திற்கொண்டு தமிழ்நாட்டில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங் கள் சிரமமின்றி செயல்படுவதற்கான சூழலை உருவாக்குதல் அரசின் கடமை. குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வழுவான கட்டமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்கிட முடியும். இந்திய அளவில் உள்ள பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்க ளுக்கான வாய்ப்புகளும், அரசின் உதவி திட்டங்களும் சிறப்பாக உள்ளன.
தமிழ்நாடு அரசின் மூலம் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறை சார்ந்த அனுமதிகள், உரிமங்களை சிரமமின்றி பெற்று பயனடையும் வகையில், ஒற்றைசாளர முறை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நடைமுறையை மேலும் எளிமைப்படுத்துவன் மூலம் அதிகளவில் தொழில் முனைவோர்களையும், சிறு, குறு தொழில் நிறுவனங்களையும் ஊக்கப்படுத்திடலாம். இத்தகைய பெருந்திரள் கூட்டங்கள் நடத்துவது மட்டுமல்லாது அந்தந்த பகுதிகளில் அதிகளவில் சிறப்பு முகாம்கள் நடத்துவதன் மூலம் அரசின் திட்டங்கள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடலாம்.
இப்பணியை அரசு செய்வது எந்த அளவிற்கு முக்கியமோ மடீட்சியா போன்ற நிறுவனங்கள் தன்னார்வமாக செய்திட வேண்டும் என, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதையொட்டி, மதுரை மாவட்டத்திற்கு குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.1638 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.1660.15 கோடி மதிப்பீட்டில் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் , மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 3 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2.37 கோடி மதிப்பீட்டில் கடனுதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ,மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, மடீட்சியா தலைவர் லெட்சுமி நாராயணன், மாவட்ட தொழில் மைய இணை இயக்குநர், பொது மேலாளர் சி. கணேசன் , துணை இயக்குநர் மு.ஜெயா , தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் ராஜா , சிப்கோ கிளை மேலாளர் பிரான்சிஸ் நோயல் உட்பட அரசு அலுவலர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.