காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.;

Update: 2023-03-17 10:00 GMT

பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை தொடக்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்(பைல் படம்)

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமை்சசர் அவர்கள் ”எல்லோர்க்கும் எல்லாம்” என்ற சமூக நீதி கொள்கையோடு பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். ஏழை, எளியோர் வீட்டுப்பிள்ளைகள்-ஒடுக்கப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகள்– எதன் காரணமாகவும் பள்ளிக்குச் செல்வது தடைப்படாமல் சமவாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும். வறுமையோ- சாதியோ எதுவும் ஒருவரது கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், நினைத்தார்கள்.

பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகள் பட்டினியாக வைத்து அவர்களுக்கு பாடம் சொல்லித் தரக் கூடாது என்ற உன்னத நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை கீழ் அண்ணாத்தோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் 15.09.2022 பேரறிஞர் அண்ணா , பிறந்த நாளன்று நடைபெற்ற விழாவில் ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை” தொடங்கி வைத்தார்கள்.

தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது என, மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் 1543 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. காலை உணவுத்திட்டத்துக்குப் பிறகு, 1319 அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.இரண்டாம் கட்டத்தில் 56 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மாநில திட்டக்குழுவின் அறிக்கை , தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆழமான ஆய்வு நடத்தப்படும் எனவும், மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 26 அரசு தொடக்கப் பள்ளிகளை சார்ந்த 3185 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஏற்கனவே, செயல்படுத்தப்பட்டு வரும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ஈரோடு மாநகராட்சி தவிர) விடுப்பட்ட அனைத்து அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் கூடுதலாக 21 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் 26 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 47 பள்ளிகளை சார்ந்த 5517 குழந்தைகள் பயனடைகின்றனர்.

காலை உணவு திட்டம் தொடர்பாக மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த த.ஜெயஸ்ரீ தெரிவித்ததாவது:-

எனது கணவர்  சிவக்குமார் மற்றும் குழந்தைகள்  அனைவரும் செல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றோம். எங்களுக்கு 1 ஆண் குழந்தை 1 பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர். எங்கள் குழந்தைகள் இருவருமே மாநகராட்சி ஆதிமூலம் ஆரம்பப் பள்ளியில் படித்து வருகின்றனர். நாங்கள் வீட்டிலேயே உணவு தயாரிக்கும் முறையில் உணவு தயாரித்து வழங்கி வருகின்றோம். இதனால், நாங்கள் தூங்குவதற்கு இரவு வெகுநேரம் ஆகிவிடும். காலையில் எழுந்து குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்து பள்ளிக்கு அனுப்புவதற்கு சிரமமாக உள்ளது.

குழந்தைகளுக்கு காலை உணவுதான் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதை அறிந்திருந்தாலும் கூட எங்களால் குழந்தைகளுக்கு சரியாக உணவு செய்து கொடுக்க முடியவில்லை. குழந்தைகள் சாப்பிடாமல் பள்ளிக்கு செல்கின்றனர் என்பதை நினைத்து தினந்தோறும் வருத்துடன் இருப்போம். தற்போதுஇ மாண்புமிகு தமிழக முதல்வர், காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் குழந்தைகள் பள்ளியிலேயே வயிற்றுக்கு சாப்பிட்டு கொள்வார்கள் என்று நினைக்கும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்குநன்றி  தெரிவித்தார்.

காலை உணவு திட்டம் தொடர்பாக, ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் இளநிலை ஆசிரியராக பணிபுரியும் செ.வினோதா தெரிவித்ததாவது:நான்  18 ஆண்டுகளாக இளநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தமிழக முதல்வர், காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். இந்த திட்டமானது மிகவும் அற்புதமான திட்டமாகும். மாணவர்கள் சிலர் காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வந்து விடுகின்றனர். காலை உணவு சாப்பிடாமல் வருவதால் அவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் இல்லாமல் சுணக்கத்துடன் காணப்படுகின்றனர்.

காலை உணவு சாப்பிட்டு விட்டு வகுப்பில் பாடத்தை கூர்மையாக கவனித்து எளிமையாக புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர்களாகிய எங்களுக்கும் பாடம் நடத்துவதில் எளிமையாக இருக்கும். குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டசத்து கிடைத்து உடலும்இ மனமும் ஒன்றிணைந்து நல்ல முறையில் கல்வி கற்று அறிவாற்றல் மிக்க மாணவர்களாக வருங்காலத்தில் உருவாக முடியும். இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகவலை மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி,  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), ம.கயிலைச் செல்வம்  ஆகியோர்  தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News