மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் பொருட்கள் நாசமாயின.;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கடைகளுக்கு அனுப்ப இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேட்டி- சேலை பண்டல்கள், கம்ப்யூட்டர், ஆவனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
மதுரை ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் நள்ளிரவில் திடீரென தீப் பற்றியது. அலுவலக வளாகத்தில் தங்கியிருந்த இரவு நேரக் காவலர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து. 4 தீயணைக்கும் வாகனங்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீவிபத்தில், அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள், ஆவணங்கள் குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்ப இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேட்டி- சேலை பண்டல்கள் பெரும்பாலும் எரிந்து சேதமடைந்துள்ளன. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் கூறினர்.
இதுகுறித்து, தற்போது தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று விசாரணை நடைபெறுகிறது.