திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா

இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு சமைத்து படையலிட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

Update: 2022-06-04 11:37 GMT

சொரிக்காம்பட்டி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடைபெற்றது.

மதுரை திருமங்கலம் அருகே சொரிக்காம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா சுமார் 250 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் சொரிக்காம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கரும்பாறை முத்தையா கோவிலில் கடந்த 250 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டுமே பங்குபெறும் வினோத திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று மாலை முதல் சுமார் 50க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு சமைத்து கருப்பசாமிக்கு படையலிட்டு ஆண்கள் மட்டுமே இரவு முழுதும் சமைத்து காலை உணவருந்தி வருகின்றனர். இவ்விழாவில் பெண்களை அனுமதிப்பதில்லை சொரிக்காம்பட்டி, பெருமாள் கோவில் பட்டி கிராம பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவில் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சொரிக்காம்பட்டி எஸ்.பாண்டி கூறியதாவது:- கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பாக சொரிக்காம்பட்டியில் சொரி நாயக்க மன்னர்கள் காலத்தில் தொன்று தொட்டு வழங்கி வந்த பழக்கம் எங்களது வழிவழியாக தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தையொட்டி விழா நடைபெறும். தற்போது அதிக மழை பெய்து கண்மாய் முழுவதும் நீரால் நிரம்பி இருந்த சூழல் காரணமாக திருவிழா சற்று தாமதமாக நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று மாலை முதல் சுமார் 200 ஆடுகளை பலியிட்டு 50க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சமைத்து கருப்பசாமிக்கு படையல் வைத்து இன்று காலை உணவு அருந்தி நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் தங்களது குறைகள் தீர்த்த சாமிக்கு இந்த ஆண்டே ஆடுகளை வாங்கி செலுத்தி விடுவர். கிராமம் முழுவதும் சுற்றிவந்து வளரும் அடுத்த வருடம் வரும்போது வெட்டுவோம். சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் இவ்விழாவில் பெண்களை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அனுமதிப்பதில்லை. எங்களது முன்னோர் வழி வந்து நாங்களும் அதையே தொடர்கிறோம் என்றார்.

Tags:    

Similar News