தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்
தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் 3 பேர் சரணடைந்தனர்.;
தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் (வயது 46) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சோரீஸ்புரம் பகுதியில் தனது நகை அடகு கடை அருகே நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து சிப்காட் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீஸார் கொலை நிகழ்ந்த இடம் மற்றும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையுண்ட முத்துக்குமாரின் சகோதரரான வழக்கறிஞர் சிவகுமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு கொலை செய்யப்பட்டார்.
கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஆத்திப்பழம் என்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த வழக்கறிஞர் சிவகுமாரை பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சம்பவத்தில் ஏற்கெனவே கொலையுண்ட ஆத்திப்பழத்தின் சகோதரர் ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அந்த வழக்கில் ராஜேஷ் இன்னும் சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கறிஞர் முத்துக்குமார் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எனவே, முன்விரோதத்தில் இந்த கொலை நிகழ்ந்து இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் வழக்கறிஞர் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், வழக்கறிஞர் முத்துக்குமாரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு தூத்துக்குடி வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என வழக்கறிஞர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை நீதிமன்றத்தில் 3 பேர் சரண்:
வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை சம்பவம் குறித்து தூத்துக்குடி சிப்காட் போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்ட நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் 3 பேர் சரணடைந்தனர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 25), அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கீழக்கடையத்தை சேர்ந்த ராஜரத்தினம் (25), திருவள்ளூர் மாவட்டம், கம்மவார்பாளையத்தைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் (30) என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மூன்று பேரையும் பலத்த பாதுகாப்புடன் போலீஸார் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.