மதுரையில் கனமழை: குடியிருப்பு பகுதியில் குடிநீர் தொட்டி உடைந்து பரபரப்பு
Madurai Rain News Today -மதுரையில் பெய்த கனமழையால் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
இடிந்து விழுந்த தண்ணீர் தொட்டி.
Madurai Rain News Today -
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை மாநகர் எல்லிஸ் நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள அரசு சார்பில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள குடிநீர் தொட்டியானது திடீரென இடிந்து கீழே விழுந்துள்ளது. மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியும் கீழே விழுந்ததில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள அரசு குடியிருப்புகளும் கடுமையான சேதமாகி உள்ள நிலையில் மழை நேரங்களில் இடிந்து எப்போது விழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,' 30 ஆண்டுகள் வரையில் உள்ள பழமையான கட்டிடங்களை மட்டுமே அரசு பராமரிக்கும். இது 30 ஆண்டுகளை கடந்து இருப்பதால் குடியிருப்பவர்கள் அவர்களே பராமரிப்பு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். எனினும் தொடர்ந்து இது போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளை கண்காணித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மதுரை நகரில் பல இடங்களில், பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.
மதுரை செல்லூர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் குடியிருப்புகள், பயன்பாடு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. இதே போல சில பகுதிகளில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும், சோழவந்தான் பூமேட்டு தெருவில், பழைய காவலர் குடியிருப்புகளின் கட்டிடங்களும், அகற்றப்படாமல் மோசமான நிலையில் உள்ளதாக தெரிகிறது.
இது போன்ற பாழடைந்த குடியிருப்புகளை, பொதுப்பணித்துறையினர், உடனே அகற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு முனைப்புக் காட்ட சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதால் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கு சாலைகளில் மரங்கள் விழுவதும், மண் சுவர் வீடுகள் இடிந்து விழுவதும், குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுவதுமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் மழை தொடர இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மழை காரணமாக மின்வாரியமும் பல்வேறு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு செய்து வருகிறது. மழை காலங்களில் மின்சார வயர் அறுந்து விழுந்திருந்தால் மக்கள் அதன் அருகில் செல்லாவோ தொடவோ கூடாது என்று கூறி வருகிறது. அதேபோல இடி,மின்னல் தாக்கும்போது மரத்தடிகளில் நிற்பதும் ஆபத்தானது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களும் மழைக்காலங்களில் சில முக்கிய நிகழ்வுகள் இருந்தால் மட்டுமே வெளியில் செல்வது நல்லது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களை வெளியில் அனுப்புவதை தவிர்க்கலாம். அதேபோல குழந்தைகள்,சிறுவர்களிடமும் மின்சாரம் குறித்த விழிப்புணர்வை பெற்றோர் வீடுகளிலேயே சொல்லித்தருவது அவசியமாகும். மின்சார வயர்கள் அறுந்து கிடந்தால் அதை தொடக்கூடாது என்பதை சொல்லிக்கொடுக்கவேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2