நிலையூர் கால்வாயில் தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட கூத்தியார்குண்டு பகுதியில், அமைந்துள்ள நிலையூர் கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், நிலையூர் கண்மாய் முழு கொள்ளளவு எட்டி, நீர் நிரம்பி மறுகால் பாய்கிறது. மேலும், இந்த கண்மாய் மூலம் சுற்றியுள்ள 22 கிராம கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால், 2,500 முதல் 3,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்ய இயலும் என விவசாயிகள் கூறினர்.
இதன் ஒரு பகுதியாக, நிலையூர் கண்மாய் மறுகால் பாய்வதால் கருவேலம்பட்டி, நிலையூர், கப்பலூர், கூத்தியார்குண்டு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி கூத்தியார் குண்டு கண்மாய் மாறுகால் பகுதியில், கூத்தியார்குண்டு விவசாய சங்க செயலாளர் கருணாநிதி, கப்பலூர் விவசாய சங்கத்தலைவர் ராஜகண்ணன், சொக்கநாதன்பட்டி விவசாய சங்கத்தின் முருகன் ,அய்யங்காளை மற்றும் ஊர் பெரியவர்கள் என, அனைவரும் மடையிலிருந்து வெளியேறும் தண்ணீருக்கு மலர்தூவி தங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.