மதுரையில் அடுத்தடுத்து இரு கொலைகள்: அச்சத்தில் பொதுமக்கள்
மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் நடைபெற்ற 2 கொலைகளால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.;
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, கிரிவல பாதையில் வைத்து அதே பகுதியை சேர்ந்த விருமாண்டி மகன் மணி என்ற மணிமாறனை (30) மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில், இந்த கொலையானது பழிக்கு பழியாக கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது என தெரியவந்துள்ளது. கடந்த 1 ஆம் தேதி அதே பகுதியில் சாலையில் நடந்து சென்ற கட்டிட தொழிலாளி சுரேஷ் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
அதன் பிறகு, 3-ஆம் தேதி சுரேஷை கொலை செய்த அவரது உறவினர் தீன என்ற தீனதயாளன், அவரது நண்பர்கள் விக்னேஷ் என்ற விக்னேஸ்வரன், சிங்கராஜா உள்ளிட்ட 3 பேரும் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த நிலையில், சுரேஷை கொலை செய்த தீனதயாளனை பழிவாங்க அவரது உறவினரான மணிமாறனை(30). நேற்று முன்தினம் இரவு தை பௌர்ணமி கிரிவலத்தன்று மணிமாறனுடன் அமர்ந்து மது அருந்திய சுரேஷின் உறவினர்களான நவீன் மற்றும் கண்ணன் என்ற இருவரும் சேர்ந்து போதையில் பழிக்கு பழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்லும் கிரிவலபாதையில் கழுத்தை அறுத்து கொலை செய்து அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து, ஒரே வாரத்தில் பழிக்கு பழியாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறியதால் குற்றவாளியை விரைந்து பிடிக்க மதுரை தெற்கு துணை ஆணையர் சாய் பிரணீத் உத்தரவிட்ட நிலையில், தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளியான நவீனை தேடி வந்தனர்.
கொலைக்கு உடந்தையாக இருந்த கண்ணனை நேற்று அதிகாலை பிடித்திருந்த நிலையில், நேற்று இரவு நவீனை 24 மணி நேரம் கழித்து போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். மதுரை தென்பரங்குன்றம் பகுதியில் பழிக்கு பழியாக அடுத்தடுத்து ஒரே வாரத்தில் கொலைகள் அரங்கேறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.