மதுரையில் வரி செலுத்தாத தனியார் பள்ளிக்கு சீல்: மாநகராட்சி அதிரடி
மதுரையில் வரி செலுத்தாத தனியார் பள்ளிக்கு ஒன்றுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பெரிய நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை வசூல் செய்யும் பணிகள் மாநகராட்சி வருவாய் பிரிவின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக வசூல் செய்யும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.5 வார்டு எண்.92 வில்லாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கான 2018-2019 முதல் 2022-2023 வரை ஐந்து ஆண்டுகளுக்கான சொத்துவரி ரூ.723397 மாநகராட்சிக்கு செலுத்தப் படாமல் இருந்தது.
இந்த பள்ளிக்கு நிலுவை தொகையை செலுத்த கோரி ஜப்தி நோட்டீஸ் அனுப்பியும், பலமுறை நேரில் சென்று வரி செலுத்தும் படி மாநகராட்சியால் கோரப்பட்டும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை இது நாள் வரை செலுத்தப்படாமல் இருந்தது.
இந்த காரணத்தினால் தனியார் பள்ளியின் முதல்வர் அறை மற்றும் அலுவலக அறையினை உதவி ஆணையாளர் மண்டலம்-5 சையது முஸ்தபா கமால், தலைமையில் வருவாய் பிரிவின் அலுவலர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, உதவி ஆணையாளர் சையது முஸ்தபா கமால், உதவி வருவாய் அலுவலர் ராஜ்குமார் உட்பட வருவாய் உதவியாளாகள் ஈடுபட்டனர்.