பருவமழையால் தத்தளிக்கும் தமிழகம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு
பருவமழையால் தமிழகம் தத்தளிப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.;
பருவ மழையால் தமிழகம் தத்தளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
மதுரை மேற்கு (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரெங்கராஜபுரம், அரியூர், வயலூர், சிறுவாலை, உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டு வழங்குவதை ஆய்வு செய்யும் முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மாவட்டப் பொருளாளர் திருப்பதி, மாவட்டமகளிர் அணி செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மாவட்ட பொறுப்பாளர் தண்டரை மனோகரன், ஆகியோர் உறுப்பினர் அட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.
தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழை நமக்கு வரப் பிரசாதம் ஆகும். இந்தப் பருவ மழையில் நாம் நீரை சேமித்து வைக்கலாம். தற்போது 6 ஆண்டுக்கு பின்பு அரபிக்கடல், வங்க கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அது புயல் சின்னமாக மாறி உள்ளது. இதன் காற்று வேகம் 55 கிலோமீட்டர் ஆகும். அதே போல் வட தமிழ்நாடு கடற்கரைகளில் 60 கிலோ மீட்டர் சூறாவளி காற்று வீசும். தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணியில் கடந்த இரண்டு நாட்களாக மழை தேங்கியுள்ளது அதை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சேலத்தில் பேருந்து நீரில் மூழ்கிவிட்டது. வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தயார் நிலையில் இருக்கிறோம் என்று பேட்டி கொடுத்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.உதயநிதி அறிக்கையில் பெரிய முரண்பாடு உள்ளது.
இது போன்ற காலங்களில் நிவாரண முகாம்கள், மருத்துவ முகாம்கள், உணவு, தேசிய மீட்பு படை தயாராக உள்ளதா? மாநில மீட்பு படையை அம்மா, எடப்பாடியார் ஆகியோர் உருவாக்கினார்கள்.அது தயார் நிலையில் உள்ளதா? இப்போது கூட மதுரையின் மையப்பகுதியில் மூன்று நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது அதை வெளியேற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து ஓடுகிறது.
நீர் வரத்து கால்வாயை சீர் செய்யவில்லை. இதே, எடப்பாடியார் ஆட்சியில் நீர் வரத்து பகுதிகளில் தூர்வாரினோம், குறிப்பாக 1 லட்சத்து பத்தாயிரம் சிறுபாலங்களை சீர் செய்ததால் அடைப்பு இல்லாமல் நீர் எளிதாக வெளியேறியது, இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் இல்லாமல், துறை சார்ந்த அமைச்சர்கள் இல்லாமல் ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ளார், இதே போல தான் கடந்த காலங்களில் வீர வசனம் பேசினார்கள், முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்காமல் தோற்றுப் போனார்கள். இன்றைக்கு அரசு செயல் இழந்து முடங்கிப் போய் உள்ளது.
இந்த பருவமழையில் மின்சாரம் தாக்கி ஐந்து பேர் உயிரிழந்ததாக செய்தி வருகிறது. பொதுவாக இந்த வடகிழக்கு பருவமழையில் உயிரிழப்பு இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்று கூறுகிறார். இதில் எந்த உயிரிழப்பும் இல்லாமல் பாதுகாப்பாக எதிர்கொள்ள வேண்டும். இன்றைக்கு சினிமாவில் உள்ளது போல சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று பதவிக்கு வந்து பேட்டி கொடுக்கிறார். தற்போது தான் நீரை உறிஞ்சும் வாகனங்கள் செல்கிறது. மூத்த அமைச்சர்களை புறக்கணித்துவிட்டு முதலமைச்சரும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆய்வு கூட்டத்தை நடத்தி அறிக்கை பேட்டி கொடுக்கிறார்கள். கடந்த மழையில் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இன்றைக்கு அரசு மட்டுமில்லாது திமுகவினர் இதில் இறங்க வேண்டும் என்று திமுக கூறுகிறது. எல்லா கட்சிகளும்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்கள்.
கடந்த மழையில் சென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் எடப்பாடியார். 5000 கோடி அளவில் மழைநீர் வடிகாலை முடித்துவிட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் இன்றைக்கு சென்னையில் மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இன்றைக்கு தமிழகமே வடகிழக்கு பருவமழையால் தத்தளிக்கிறது. இதை காப்பாற்றாமல் அரசு செயல் இழந்துவிட்டது. இனியாவது அரசு விழித்துக் கொண்டு மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.