மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம்
மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.;
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு வெங்கடேசனும், சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி ப சிதம்பரமும் போட்டியிடுகிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு பொதுக்கூட்டம் மதுரையில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பெரியசாமி,பெரியகருப்பன், மெய்யநாதன், பழனிவேல் தியாகராசன், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, தமிழரசி, பூமிநாதன் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சட்டமன்ற உறுப்பினர்கள் , தோழமைக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாரதப் பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் சொன்ன வாக்குறுதி எதனையும் நிறைவேற்றவில்லை. நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். மோடி ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் பணம் போடுவோம் என்றார். ஆனால் அந்த திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மதுரையில் எய்ம்ஸ் திட்டமானது 10 ஆண்டுகளாக கானல் நீராக உள்ளது .
பாஜக அரசு மக்கள் விரோத அரசாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு உதவ முன் வரவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பார்த்து ஆறுதல் கூறுவதற்கு கூட மோடி வரவில்லை. பிரதமர் மோடி எதிர் கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தில், முதலமைச்சர்களை பழிவாங்கும் நோக்கில் மோடி செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.