மதுரையில் பட்டு கைத்தறி கண்காட்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
மதுரையில் பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.;
மதுரை மாவட்டம், எல்.என்.எஸ். இல்லத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், அரசு சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார்.
கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஜவுளி இரகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையினை மேம்படுத்தி தொடர் வேலைவாய்ப்பின் மூலம் நெசவாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் சிறப்பு தள்ளுபடி பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை இன்று 11.07.2022 முதல் 31.07.2022 வரை நடத்தப்படவுள்ளது.
இக்கண்காட்சியில், காஞ்சிபுரம், திருபுவனம், ஆரணி பட்டு சேலைகள்,சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை, திருப்பூர், மென்பட்டு சேலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் நுகர்வோர்கள் வாங்கி பயன்பெறும் வகையில், பட்டு இரகங்களுக்கு 20 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை தள்ளுபடி மற்றும் ரூ.500 அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் பழைய பட்டுப்புடைகளை பெற்றுக்கொன்டு, அதன் ஜரிகை மதிப்பின்படி புதிய பட்டுப்புடவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற பொங்கல் சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சியில் ரூபாய் 2.89 கோடி மதிப்புள்ள பட்டு ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டில், ரூபாய் 3.00 கோடி விற்பனை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி ,தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் கண்காட்சியினை பார்வையிட்டு தரமான ஜவுளி ரகங்களை குறைந்த விலையில் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், திகோ சில்க்ஸ் இணை இயக்குநர்ஃமேலாண்மை இயக்குநர்செல்வம், மதுரை சரக கைத்தறித் துறை உதவி இயக்குநர் பா. வெங்கடேசலு உட்பட அரசு அலுவலர்கள் கைத்தறி நெசவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.