தரமான உணவுகளை உணவகங்கள் வழங்க வேண்டும்: அமைச்சர்.சுப்ரமணியம்
திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படிகள், இலவச அன்னதானம் வழங்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெறவேண்டும்.;
தரமான உணவுகளை, உணவகங்கள் வழங்கவேண்டும் என தமிழக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்,
மதுரை விமான நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்ததாவது: மதுரை மாவட்டத்தில், நடைபெற்று வருகின்ற சித்திரை திருவிழாவை பொறுத்தவரை10 முதல் 15 லட்சம் மக்கள் கூடுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் எவ்வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்த, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருமளவில் மக்கள் கூடுகின்ற இந்த விழாவில் எவ்விதமான தொற்று நோய் பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவிழா நடக்கும் பகுதிகளில் சுமார் 1580 மாநகர பணியாளர்கள், 160 சிறப்பு பணியாளர்கள் மற்றும் 1800 அயல் நகராட்சி பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 22 துப்பரவு ஆய்வாளர்கள் இப்பணியை மேற்பார்வையிடுவார்கள்.பொதுமக்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரை உறுதிசெய்யும் பொருட்டு 23 சிறப்பு குழுக்கள் அமைத்து குடிநீரில் குளோரின் அளவை சரிபார்க்கும் பணியினை மேற்கொள்வார்கள்.
கோடை மழையும் பொழிந்து கொண்டு வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்களை கட்டுப்படுத்த 10 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கபட்டுவருகிறது. திருவிழா காலங்களில் மக்கள் அதிகமாக கூடுவதால் தங்கும் விடுதிகள் மற்றும் மடங்கள் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். உணவகங்கள் அன்னதானம் வழங்கும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 7 சிறப்புக் குழுக்கள் அமைத்து உணவு பாதுகாப்பு துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருவிழாவில், கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை அளித்திட மாநகராட்சி பொது சுகாதாரத்துறை 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இம்முகாம்களில், 168 மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். எனவே கடந்த ஆண்டு 20 முகாம்கள் நடத்தப்பட்டது. தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர், அறிவுத்தலின்படி 56 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே 32 இடங்களில் ஆம்புலன்ஸ் வண்டிகள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி பல பணிகளை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.
மக்கள் நல்வாழ்வுத் துறை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு வகையில் மண்டகப்படிகளில் வழங்கப்படும் உணவுகள், சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் ஆகியவை சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்த்திருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளபடுகிறது. கோடை காலம் என்பதால் தற்காலிக குளிர்பான விற்பனை இடங்கள் மற்றும் உணவகங்களில் தரமான குடிநீர் செயற்கை சாயங்களற்ற உணவுகளை விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படிகள், இலவச அன்னதானம் வழங்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெறவேண்டும். உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவிக்கலாம். எனவே, இந்த சித்திரை திருவிழாவானது தொற்று நோய் பாதிப்பு இல்லாமல், சுகாதார சீர்கேடு இல்லாமல், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நடைபெற்றிட வேண்டும் என்கின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்த பணிகளெல்லாம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இச்சந்திப்பின்போது, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் இரத்தினவேலு, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் குமரகுருபரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.