சோழவந்தான் பகுதி கிராமங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
சோழவந்தான் பகுதிக்கு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் கல்லூரி மாணவிகள் வலியுறுத்தல்;
சோழவந்தான் பகுதிக்கு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் கல்லூரி மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான, கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், மன்னாடி மங்கலம், முள்ளி பள்ளம், தென்கரை, குருவித்துறை, திருவேடகம் , மேலக்கால், நெடுங்குளம் ,தச்சம்பத்து ,விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து பட்டப்படிப்பிற்காகவும் தொழில் சார்ந்த படிப்புகளுக்காகவும் மதுரை நகர் பகுதிகளுக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று வருகின்றனர்.
இவர்கள், கல்லூரி முடிந்து மாலை 5 மணிக்கு மேல் வீடு திரும்புவதற்கு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து போதுமான பேருந்து வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாலை ஆறு மணி முதல் ஏழு முப்பது மணி வரை சோழவந்தான் விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு எந்த ஒரு பேருந்தும் இல்லாததால், தினசரி சுமார் இரண்டு மணி நேரம் பெரியார் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நீடித்து வருகிறது. இதனால், வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,மாலை நேரத்தில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ,மாணவிகள் கூறுகையில்: சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், இதில் தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.