திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் பணம் செலுத்த கியூஆர் கோடு வசதி

முருகனின் ஆறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முதலாவது படை வீடாகும்.;

Update: 2023-09-29 12:00 GMT

பைல் படம்

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பொதுமக்கள் நன்கொடை செலுத்த க்யூ.ஆர்.கோடு வசதியை  கோவில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை நேரடியாக திருக்கோவில் அலுவலகத்தில் செலுத்தி வந்தனர். மேலும், இணையதள வசதி மூலமாக பக்தர்கள் திருக்கோவில் வங்கி கணக்கில் காணிக்கைகள் மற்றும் நன்கொடை செலுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தற்போது கூடுதலாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தாங்கள் கோவிலுக்கு செலுத்த நினைக்கும் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை அலைபேசி மூலமாக செலுத்துவதற்கு கியூ.ஆர்.கோடு வசதியை பயன்படுத்தி தங்களின் அலைபேசி மூலமாக நன்கொடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருக்கோவில் வளாகத்திற்குள் பிரத்தியேகமாக மிகப்பெரிய கியூ.ஆர்.கோடு உடன் கூடிய பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறிமுகச் சுருக்கம்... மதுரை ரயில்நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டா் தொலைவில் இத்தலம் உள்ளது. இது முருகன் (அ) சுப்ரமணியரின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகும். உறுதி வாய்ந்த கற்பாறையில் (மலையில்) இறைவனின் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு குடைவரைக் கோயிலாகும். இங்குள்ள குடைவரைக் கோயில்கள் 8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் காலத்தவை என கணக்கிடப்படுகின்றன. இந்த ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், சுப்ரமணியரின் திருமணம் இந்திரன் மகளான தேவயானையுடன் இங்கே நிகழ்ந்தது. பழம்பெருமை வாய்ந்த இந்த கோயில், பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. சுவர்கள் மற்றும் தூண்களில் கண்கவர் சிற்பங்கள் உள்ளன.

Tags:    

Similar News