பூட்டிய வீடுகளை கண்காணிக்க செயலி: மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தகவல்
மதுரை மாவட்டத்தில், பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் வகையில் காவலன் எனும் ஆண்ட்ராய்டு செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது;
பூட்டிய வீடுகளை கண்காணிக்க புதிய செயலி உள்ளதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில், பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் பொருட்டு மதுரை காவலன் எனும் ஆண்ட்ராய்டு செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், மதுரை மாவட்ட காவல்துறை பற்றிய செய்திகள், புகார்கள் காவல் நிலையங்கள் பற்றிய விவரங்கள் போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், உத்தரவின்பேரில் பூட்டிய வீடுகளை கண்காணிக்கும் மதுரை காவலன் செயலியில் பொதுமக்களுக்காக பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதில், வெளியூர் செல்லும் போது பயன்படுத்தும் பூட்டிய வீடுகளை காவலர்கள் கண்காணிக்கும் பணி க்யூ ஆர் குறியீடு வசதி சேர்க்கப்பட்டு , வீட்டு உரிமையாளருக்கு கண்காணிப்பு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. அந்த க்யூ ஆர் குறியீடு வீட்டு உரிமையாளர் தன் வீட்டின் முன்போ, அல்லது தான் வசிக்கும் பகுதியில் ஏதேனும் பொது இடத்தில் ஒட்டி விட்டால் ,அந்த பகுதியில் காவலர்கள் ரோந்து செய்து அந்த க்யூ ஆர் குறியீடை ஸ்கேன் செய்து அதன் மூலம் தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் சம்பந்தப்பட்ட நபருக்கும் அனுப்பப்படும். கண்காணித்த தகவல் கண்காணிப்பு செய்த நேரத்துடன் வீட்டு உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
மதுரை மாவட்டத்தில் இதற்கென 44 இருசக்கர வாகனங்கள் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் சுழற்சி முறையில், மேற்படி பூட்டிய வீடுகள் இருக்கும் பகுதிக்குச் சென்று ரோந்து செய்து அந்தப் பகுதியில் வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ ஒட்டப்பட்டிருக்கும் க்யூஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிப்பர்.
அதேபோல், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ரோந்து பணிக்கு நியமிக்கக் கூடிய காவல் அதிகாரிகள் அந்த பகுதியில் ரோந்து செய்து இந்த க்யூ ஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புவர். மதுரை காவலன் செயலியில் மேம்படுத்தப்பட்ட வசதிகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அறிவுறுத்தியுள்ளார்.