மதுரை மாநகராட்சி சுகாதார மையத்தில் கர்ப்பிணிகளை தரையில் உட்கார வைக்கும் அவலம்

வியாழக்கிழமை நடைபெற்று வந்த பரிசோதனை திடீரென்று செவ்வாய்க் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதால் ஏராளமான கர்ப்பிணிகள் குவிந்தனர்

Update: 2022-05-11 08:30 GMT

மதுரை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் தரையில் அமர்ந்திருக்கும் கர்ப்பிணிகள்

தொடர்ந்து பலமுறை சொல்லியும், மதுரையில் மாநகராட்சி நகர்புற சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிகள் நாற்காலி வசதியின்றி தரையில் அமர வேண்டிய அவலம் தொடர்கிறது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பைக்காரா பகுதியில் செயல்பட்டுவரும் மாநகராட்சிக்கு சொந்தமான நகர்புற சுகாதார நிலையத்தில், முனியாண்டிபுரம் பழங்காநத்தம் மாடக்குளம், முத்துராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர பரிசோதனைக்கு வருகை தருவார்கள்.

வாரம்தோறும், வியாழக்கிழமை நடைபெற்று வந்த பரிசோதனை திடீரென்று  செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான கர்ப்பிணிகள் குவிந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் போதிய இருக்கை வசதி இல்லாத நிலையால் கர்ப்பிணிகள் தரையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். தரையில் அமரவும் இடம் இல்லாத சூழலில் ஆங்காங்கே நின்றபடி கால் கடுக்க காத்திருந்து பரிசோதனை முடித்து சென்றனர்.

மருத்துவமனையை சுற்றிலும் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால் கர்ப்பிணிகளுக்கு தொற்று பரவும் நிலையும் ஏற்பட்டது. பைக்காரா மகப்பேறு மருத்துவமனை ஏற்கெனவே, செயல்பட்டு வந்த பழங்காநத்தம் பகுதியில் மீண்டும் செயல்பட வேண்டும். மருத்துவமனை மாற்றத்தால் கர்ப்பிணிகள் நீண்ட தூரம் அலைச்சலுக்கு ஆளாகும் நிலை தொடர்கின்றன. இட வசதி தொடர்பாக பல முறை புகார் அளிக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத நிலையில் மருத்துவமனையில் அனைத்துவித அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News