மதுரையில் வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் பணி நீக்கம்
காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் மிரட்டி வாங்கிக் கொண்டதாக ஜூலை 27ம் தேதி அவர் கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு செய்தனர்.;
வியாபாரியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை பறித்த காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில், உள்ள இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடமிருந்து கடந்த ஆண்டு 2021, ஜூலை மாதம் 5 -ஆம் தேதி அன்று 10 லட்ச ரூபாய் பணத்தை மதுரை தேனி ரோடு அருகில் வைத்து பால்பாண்டி, பாண்டியராஜன், உக்கிரபாண்டி, சீமைச்சாமி மற்றும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் மிரட்டி வாங்கிக் கொண்டதாக ஜூலை 27ம் தேதி அவர் கொடுத்த புகாரில், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படையினர், சம்பவத்தில் தொடர்புடைய தேனியை சேர்ந்த பால்பாண்டி, உக்கிர பாண்டி, சீமைச்சாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 2.5 லட்சம் வரை பணத்தை கைப்பற்றி பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், தலைமறைவாக இருந்த மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவந்திருந்த வசந்தி, பாதிக்கப்பட்ட நபரை மிரட்டியதாக மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவருடைய ஜாமீனை ரத்து செய்து சில வாரங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், தற்போது அவரை பணி நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி உத்தரவிட்டுள்ளார்.