மதுரை அருகே ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் காவல் ஆணையர் ஆய்வு

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;

Update: 2023-12-23 09:15 GMT

மதுரை அருகே, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை, காவல் ஆணையர் லோகநாதன் ஆய்வு செய்தார்.

அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பகுதிகளை மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் தை திரு நாள் பொங்கல் முதல் நாள் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

இதனை ஒட்டி, பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதி திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள தற்காலிக கால்நடை மருத்துவமனைகள் ஜல்லிக்கட்டு மாடுகள் பரிசோதனை பகுதி மற்றும் வாகனங்கள் செல்லும் திருப்பரங்குன்றம் சாலை ,முத்துப்பட்டி சாலை, வெள்ளக்கல் பகுதி ஆகிய இடங்களில் பார்வையிட்டு  போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.

திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் செல்வகுமார், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்துராஜ் ஆகியோர் ஆய்வுப் பணிகளில் கலந்து கொண்டனர்.

மதுரை அருகே அலங்காநல்லூர், அவனியாபுரம் ,பாலமேடு ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் பொங்கலை ஒட்டி, ஜல்லிக்கட்டு விழா நடைபெறும் வழக்கம்.அவ்வாறு, நடைபெறும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை ,மாவட்ட ஆட்சியர், போலீசார் ஆய்வு செய்வது வழக்கம் .அதன்படி ,மதுரை அருகே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மதுரை காவல் ஆணையர் ஆய்வு செய்தார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லுரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அவனியாபுரத்தில் 100 ஆண்டுகளுக்கும மேலாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வந்தது.

இந்தப் போட்டியை நடத்துபவர்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிகளவில் இருப்பதாக குற்றம்சாட்டி உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்தி வந்தது. இந்நிலையில் 2024-ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நாங்கள் தான் நடத்துவோம் என பல தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வருகின்றனர். இதனால் அவனியாபுரத்தில் வசிக்கும் பல்வேறு பிரிவினர் இடையே பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

இந்த செயல்களால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மக்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தனிக்குழுவோ, தனிப்பட்ட அமைப்போ நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, சாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாநகராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து மாவட்ட நிர்வாகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை சாதி, மத சார்பு இல்லாமல் நடத்த வேண்டும். 2024ம் ஆண்டிலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News