11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிளம்பர் மதுரை விமான நிலையத்தில் கைது

11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிளம்பரை மதுரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-10-20 15:05 GMT

குழந்தை திருமணம் செய்த வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வாலிபர் துபாயிலிருந்து மதுரை வந்தபோது மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அய்யாபட்டி,ஓட்ட கோவில்பட்டியை சேர்ந்த மணிமுத்து என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 36.) இவர், துபாயில் பிளம்பர் ஆக பணிபுரிந்து வருகிறார்.

துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இன்று பகல் ஒரு மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தார் .

அவரிடம் குடியேற்றத்துறை அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சோதனை செய்து பார்த்ததில், அவர் மீது 2012 ஆம் ஆண்டு குழந்தை திருமணம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர் தலைமறைவாக இருந்ததையொட்டி அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் என்ற பெயரில் இதற்கான தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விமான நிலையத்தின் குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்  தான் 11 ஆண்டுகள் கழித்து பிளம்பர் ராஜேஷ் மதுரை வந்தபோது மதுரை விமான நிலையத்தில் பிடிபட்டு உள்ளார். ராஜேஷ் போலீசால் தேடப்படும் குற்றவாளி என்பதால் விமான நிலைய குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் இதுபற்றிய தகவலை உடனடியாக மேலூர் போலீசாருக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து  அவரை மேலூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

குற்ற வழக்கில் தலைமறைவான வாலிபர் 11 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டது குறித்து மதுரை விமான நிலையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

Similar News