மதுரையில் பாடகர் டி.எம். சௌந்தர்ராஜனுக்கு உருவச்சிலை அமைக்க இடம் தேர்வு

மதுரை முனிச்சாலை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டட வளாகத்தில் உருவச்சிலை அமையவுள்ளது;

Update: 2023-03-25 08:45 GMT

பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன்(பைல் படம்)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ,பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு  முழு திருவுருவச்சிலை  அமைப்பதற்கான இடம்  குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவின்படி, பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , மதுரை தெற்கு வட்டம், முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டடம் வளாகத்தில், அன்னாரது முழு திருவுருவச்சிலை அமைக்கப்படவுள்ளது.

தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன், 1923-ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார். 1950-ஆம் ஆண்டு முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்த அவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் நீங்கா இடம் பிடித்தார். டி.எம்.சௌந்தரராஜன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு "ஏழிசை மன்னர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும், 1969-ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் அவர்களால் "இசைக் கடல்" என்றும் போற்றப்பட்டார். 2003-ஆம் ஆண்டு டி.எம்.சௌந்தரராஜன் , பத்மஸ்ரீ பட்டமும் பெற்றார். தனது குரல் வளத்தால் மக்கள் மனதில் இடம்பெற்ற டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் 25.5.2013-அன்று மறைந்தார்.

பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன், புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மதுரையில் அன்னாரது முழு திருவுருவச்சிலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ,மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிலை அமைப்பதற்கு சரியான இடம் தெரிவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, மதுரை தெற்கு வட்டம் முனிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலம் (பழைய) அலுவலகக் கட்டடம் வளாகத்தில் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் முழு திருவுருவச்சிலை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறையின் மூலம் சிலை நிறுவுவதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருவுருவச்சிலை தயார் நிலையில் உள்ளது. அந்த வகையில், மேற்குறிப்பிட்டுள்ள இடத்தில் மிக விரைவில் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் முழு திருவுருவச்சிலை அமைக்கப்படவுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில், பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு. "டி.எம்.சௌந்தரராஜன் சாலை" எனப் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின் பெயர் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதேபோல, அவர் பாடிய புகழ்பெற்றப் பாடல்களை நினைவுகூரும் வகையில் இன்னிசைக் கச்சேரி இன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

Tags:    

Similar News