மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பிரவீண்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்;

Update: 2023-06-11 11:30 GMT

மதுரை மாநகராட்சி புதிய ஆணையாளர் பிரவீன்குமார்.

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பிரவீண்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மதுரை மாநகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றபின்னர் அவர் கூறியதாவது: ஒருங்கிணைந்த அனைத்து வளர்ச்சிப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படும். மதுரை மாநகரம் மிகவும் தொன்மையான பழமையான நகரமாகும். மதுரை மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகரத்திட்டம் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சியின் பல்வேறு பிரிவுகளான வருவாய்ப்பிரிவு, பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு மற்றும் பொது சுகாதாரப் பிரிவின் மூலம் அனைத்துப் பணிகளும் தொடர்ந்து பொது மக்களுக்கு சேவைகள் செய்வதில் பணியாற்றி வருகிறது. தொடர்ந்து ஒருங்கிணைந்த அனைத்து வளர்ச்சிப்பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்படும். மதுரை மாநகரை அழகுமிக்க நகரமாகவும், மதுரை மாநகராட்சியை முதல்நிலை மாநகராட்சியாகவும் கொண்டுவருவதற்கு முயற்சி எடுக்கப்படும் என்று ஆணையாளர் கே.ஜே.பிரவீண் குமார் தகவல் தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி வரலாறு..

1866: மதுரை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு. அப்போதைய மக்கள் தொகை 41,601. நகரின் பரப்பளவு 2.60 சதுர கிலோமீட்டர்.1882: நகராட்சியில் புதிதாக ஆணையாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. முதலாவது ஆணையாளர் அதே ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி பதவியேற்றார்.1885: ஆணையாளர் பதவி நகர்மன்ற உறுப்பினர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பல நகர்மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆணையாளர்களின் தலைவர் பதவி நகர்மன்றத் தலைவர் என்று மாற்றப்பட்டது. முதலாவது நகர்மன்றத் தலைவராக ராவ் பகதூர் ராமசுப்பய்யர் என்பவர் பதவியேற்றார்.

1892: நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் 6 பேரை அரசே நியமிக்கும்.1921: நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்த்தப்பட்டது.1931: அரசியல் காரணங்களுக்காக நகராட்சிக் குழு (நகர் மன்றம்) கலைக்கப்பட்டது. மாவட்ட உதவி ஆட்சியாளர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.1933: மீண்டும் அதே நகராட்சிக் குழு (நகர் மன்றம்) செயல்பட அரசு அனுமதித்தது.1942: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆதரித்ததற்காக நகராட்சிக் குழு (மன்றம்) மீண்டும் கலைக்கப்பட்டது.

1943: நகராட்சிக் குழு (மன்றம்) முழுவதும் மாற்றியமைக்கப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அரசே நியமிக்கும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது.1948: சுதந்திரத்திற்குப் பின் முதல் முறையாக நகராட்சிக் குழு (நகர் மன்றம்)வுக்குத் தேர்தல் நடந்தது. ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் இந்த தேர்ந்தெடுக்கப்பட் நகராட்சிக் குழு (நகர் மன்றம்) செயல்படத் துவங்கியது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் 1969 வரை செயல்பட்டனர்.

1969: நகராட்சிக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 48 நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள், மூன்று பேர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்.1971: மதுரை நகராட்சியானது மாநகராட்சியாக 1 மே 1971 அன்று உயர்த்தப்பட்டது. நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாநகராட்சியின் முதல் மாமன்றத் தலைவராக (மேயர்) எஸ்.முத்து தேர்வு செய்யப்பட்டார். 

1974: மேலும் 13 பஞ்சாயத்துக்கள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. நகரிலுள்ள வார்டுகள் 65 ஆக மாற்றம் செய்யப்பட்டன.1978: மாநகராட்சிக்கு முதல் முறையாக தேர்தல் நடந்தது. 65 நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். இவர்களில் 5 பேர் பெண்கள், 4 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.1991: வார்டு சீரமைப்பு கமிட்டியின் பரிந்துரைகளின்படி மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கை 72 ஆக மாற்றப்பட்டது.

2011: மதுரை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தின் காரணமாக 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள்,11 கிராம பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100ஆக மாற்றம் செய்யப்பட்டன.

மதுரை மாநகராட்சி மண்டலங்களும் வட்டங்களும்: மதுரை மாநகராட்சி இரண்டு மாவட்டப் பிரிவுகளாக செயல்படுகின்றது. ஒன்று தீர்மானித்து ஆய்ந்து செயல் படுகின்ற பிரிவு (ஆய்வுக் குழு) இன்னொன்று செயலாட்சி புரிகின்ற பிரிவு என இரு பிரிவுகளாக பிரிந்து செயல்படுகின்றன. செயலாட்சியர் பிரிவில் நகராட்சி உறுப்பினர்கள், நகராட்சித் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.

தமிழக மாநகராட்சிகளாக, பெருநகர சென்னை · கோயம்புத்தூர் · மதுரை · ஈரோடு · சேலம் · தூத்துக்குடி · திருச்சிராப்பள்ளி · திருநெல்வேலி · தஞ்சாவூர் · திருப்பூர் · வேலூர் · திண்டுக்கல் · ஓசூர் · நாகர்கோயில் · ஆவடி · தாம்பரம் · காஞ்சிபுரம் · கரூர் · கும்பகோணம் ·  கடலூர்,  சிவகாசி ஆகிய மாநகராட்சிகள் உள்ளன.



Tags:    

Similar News