ஆடு பகை குட்டி உறவா? அழகிரியுடன் அமைச்சர் உதய நிதி திடீர் சந்திப்பு
அழகிரியுடன் அமைச்சர் உதய நிதி திடீர் என சந்தித்தது ஆடு பகை குட்டி உறவா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி அழகிரியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் என சந்தித்து பேசியது ஆடு பகை குட்டி உறவா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி. இவர் கருணாநிதி காலத்தில் தி.மு.க.வின் தென்மண்டல செயலாளராக பதவி வகித்தார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார். பின்னர் கட்சி விரோத நடவடிக்கைகளின் காரணமாக அவர் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக கருணாநிதி அறிவித்தார்.
இதன் பின்னர் கருணாநிதியின் இளைய மகனான ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். தற்போது தமிழக முதல் அமைச்சராகவும் உள்ளார். ஆனாலும் அண்ணன் தம்பி இடையே சந்திப்பு எதுவும் நிகழாமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக மதுரைக்கு வந்திருந்தார். அப்போது அவர் மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள இல்லத்தில் தனது பெரியப்பாவான அழகிரியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து ஆசீர்வாதம் பெற்றார்.
இதுபற்றி அழகிரி கூறுகையில் பெரியப்பாவை பார்க்க தம்பி மகன் வந்திருக்கிறார் என்றார். . அழகிரி மனைவி காந்திஅழகிரி, உதயநிதி ஸ்டாலினுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். அரசியல் ரீதியாக அண்ணனும், தம்பியும் சந்திக்க வில்லை என்றாலும் ஆடு பகை குட்டி உறவு என்கிற பாணியில் இந்த சந்திப்பு நடந்துள்ளதா? என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.