மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பதுங்கி இருந்தவர் பிடிபட்டார்
போலீஸார் நடத்திய விசாரணையில் மதுபோதையில் படுத்து உறங்கியதாக தெரிவித்த நிலையில் அந்த இளைஞரை விடுவித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்னதானம் உணவு சாப்பிட்டுவிட்டு இரவு முழுவதும் கோவிலுக்குள் பதுங்கி இருந்த இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருகை தருவார்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு பக்தர்களும் கடுமையான சோதனைக்கு பின்பாகவே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு பூஜை பொருட்கள் தவிர மற்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் பஜனைகோவில் தெரு பகுதியைச் சேர்ந்த வினோத்(24) என்ற இளைஞர் மது போதையில் வடக்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் நுழைந்துள்ளார். பின்னர் கோவிலுக்குள் உள்ள வடக்காடி வீதியில் விநாயகர் சிலை அருகிலயே உள்ள மரத்தின் கீழே படுத்திருந்துள்ளார்.
இதனையடுத்து, இரவு கோவில்நடை சாத்தப்பட்டு கோவில் கதவுகள் மூடப்பட்ட நிலையிலும் திடிரென நள்ளிரவு 3 மணியளவில் கோவில் கதவுகள் அருகே சென்றுள்ளார். இதனையடுத்து கதவுகள் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வினோத் கதவை தட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட வினோத் சில ஆண்டுகளுக்கு முன்பு காசிமேடு பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது அதனை விட்டுவிட்டு பல்வேறு பகுதிகளிலும் மதுபோதையில் சுற்றி திரிந்துள்ளார்.நேற்று முன்தினம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த போது போதையில் இருந்ததால் அவரது பையை தொலைந்துவிட்டார்.
இதனைத்தொடரந்து ,அவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிடுவதற்காக வந்துள்ளார். இதையடுத்து அன்னதானம் சாப்பிட்ட பின்னர் வடக்காடி வீதி விநாயகர் சிலை அருகே இருந்த கோவில் மரத்தடியில் படுத்து உறங்கியதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதுபோதையில் சென்று படுத்து உறங்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் நேற்று மாலை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் விசாரணை நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு நேரத்தில் படுத்து உறங்கிய இளைஞரை பிடித்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் , தமிழக உளவுத்துறை காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்துப்பிரிவு காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்திய நிலையில் மதுபோதையில் படுத்து உறங்கியதாக தெரிவித்த நிலையில் அந்த இளைஞரை விடுவித்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு ஒவ்வொரு பக்தர்களும் கடுமையான பாதுகாப்பு சோதனை செய்யப்பட்ட பின்பாகவே அனுமதிக்கப்பட்டுவருவார்கள்.இந்த நிலையில், இதுபோன்று பாதுகாப்பு அலட்சியம் காரணமாக விடிய விடிய இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் மது போதையில் படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.