மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழப்பு
விமானங்கள் ஏறி இறங்குவதைக் காண இந்த சாலை ஓரத்தில் நிற்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை
மதுரை (சின்ன உடைப்பு)விமான நிலையம் அருகே முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார்:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா , நைனார் பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பாண்டியம்மாள், அதே பகுதியை சேர்ந்த நாகேஸ்வரன் மனைவி அங்கம்மா இருவரும் இருசக்கர வாகனத்தில், வளையன்குளம் பகுதியில் ஒரு நிகழ்சியில் கலந்து கொண்டு விட்டு, திருப்புவனத்துக்கு திரும்பி ,மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சடையாண்டி என்பவர் மகன் நாராயணன், மதுரை விமான நிலைய ஓடுபாதை அருகே உள்ள சாலையில் காரில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார், முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கம்மா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் காவல் துறையினர், உடலை கைப்பற்றி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மதுரை விமான நிலைய ஓடுபாதை சின்ன உடைப்பு அருகே அமைந்துள்ள சாலையில் செல்லும் பொதுமக்கள் விமானங்கள் ஏறுவது இறங்குவதைக் காண இந்த சாலை ஓரத்தில் நிற்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.