மதுரை: மெட்ரோ ரயில் ஆலோசனைக் கூட்டம்
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அமைவதற்காக அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. மதுரை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை போல, மதுரை மாநகரிலும் அமைக்கப்பட உள்ளது. அதன்படி, மதுரை மாநகரின் பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி மதுரை மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி செய்யப்பட உள்ளது. இதன் முதல் பணியாக மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.
இதற்கான ஆலோனைக் கூட்டம், மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மதுரை தனியார் தங்கு விடுதி கூட்ட அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்தாவது:
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் (Project) அமைவதற்காக அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் (Project) செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான (Project) விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி.அசோசியேட்ஸ் ஆர்சி டெக்ஸ் இன்ஜினியர்ஸ் & கன்சல்டன் நிறுவனத்திற்கு 2023, மார்ச் 28-ஆம் தேதி அன்று ஒப்பந்தம் ஆகி உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை 75 நாள் காலக்கெடுவுக்குள் தயாரிக்கப்பட்டு முடிக்க வேண்டும்.
இந்த விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் இத்திட்டம் தொடர்பாக பல்வேறு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு மறுசீரமைக்கப்பட்ட போக்குவரத்து மாதிரியின் மூலம் புதிய முன்னறிவுப்புகளை உருவாக்குவதற்கான ஒரு ஆய்வு அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மக்கள் விரைவுப் போக்குவரத்துக்கான வாய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு நேரடி பரிசீலனைக்கு பின்னர் பல கள ஆய்வுகளுடன் ஆய்வுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, திருமங்கலம் முதல் கே.புதூர் வழியாக ஒத்தக்கடை வரை உத்தேச இடத்திற்கு இடையில் தொடர்ந்து திட்டம் சாதகமாக இருக்கும் இந்த வழித்தடம் வசந்த் நகர் முதல் கோரிப்பாளையம் வரை பூமிக்கடியில் செல்ல இருக்கிறது.
மெட்ரோ ரயில்களை பராமரிக்க சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் மெட்ரோ பணிமனைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. விரிவான சாத்தியக்கூறு அறிக்கை பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளது. மதுரை மெட்ரோ ரயில் திட்டம்31 கி.மீ நீளத்திற்கு ரூபாய் 8 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், 3 பெட்டிகள் கொண்ட மெட்ரோ இரயில் அடங்கும். மெட்ரோ இரயில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டிருக்கிறது. நீண்ட தூரம், அதிக வேகம், நெகிழ்வு தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மெட்ரோ ரயில் பொருத்தமான வகையில் இருக்கும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 20 துறைகளுடன் இணைந்து விரிவான திட்ட அறிக்கையில் தயாரிக்கும் பணிணினை 75 நாட்களுக்குள் முடிக்கும் பொருட்டு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மெட்ரோ ரயில் வழித்தடத்தில் புவி அமைப்பு மற்றும் புவிதொழில் நுட்ப ஆய்வு மேற்கொள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துக்காவல் துறைக்கு ஒப்புதல் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, உள்ள நிலத்தடி பயன்பாடு விவரங்கள் அதாவது குடிநீர் வழங்கல், கழிவுநீர், மழைநீர் பாதைகள் மற்றும் மின் இணைப்பு கேபிள்கள், எரிவாயு குழாய்கள் பிற துணை மின் பாதைகள் போன்ற பல்வேறு விவரங்கள் விரிவான திட்ட மதிப்பீட்டுக்கான ஆலோசகரிடம் பகிர்ந்து கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலங்களை ஒருங்கிணைப்பதற்காக ரயில்வே மற்றும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை அலுவலர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் ஆட்சியர் (திட்ட அலுவலர்) சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான் ஷு நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜீனன், முதன்மைப் பொது மேலாளர் (கட்டிடக்கலை) ரேகபிரகாசம், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார், மீனாட்சியம்மன் திருக்கோயில் துணை ஆணையர் அருணாச்சலம், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அனந்த பத்மநாபன், காவல் துணை ஆணையர் (மதுரை தெற்கு) சாய் பிரனித், காவல் துணை ஆணையர் (மதுரை வடக்கு) அரவிந்த், காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) ஆறுமுகசாமி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.