7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு தடையாக உள்ளது: வைகோ குற்றச்சாட்டு
சதாசிவம் நீதிபதியாக இருந்தபோது இவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.
7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களை, மாநில அரசே விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு முன்பாகவே, முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் தூக்குத் தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது. சதாசிவம் நீதிபதியாக இருந்தபோது இவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இதையடுத்து, மாநில அரசு மூன்றே நாளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னரிடம் அனுப்பி வைத்தது. ஆனால், கவர்னர் அதை குப்பையில் போட்டுவிட்டார். தற்போது, தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது. மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இந்தியாவிற்கே வழி காட்டக்கூடிய சமூக நீதியின் அடையாளம் ஆகும். கொடநாடு கொலை குறித்து விசாரணை செய்யக்கூடாது என அதிமுகவினர் கூறுவது தவறு. கொடநாடு கொலை என்பது படுபயங்கர பாதகமான கொலையாகும். அங்கே பணம் மற்றும் நகைகள், ஆவணங்கள் இருப்பது தொடர்பாக செய்யப்பட்ட கொலையாகும் என்றார் வைகோ .