மதுரையில் சித்திரைத் திருவிழா: அமைச்சர்கள் ஆட்சியர் ஆலோசனை
மதுரை சித்திரைத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் பழனிவேல்தியாகராஜன், மூர்த்தி, ஆட்சியர் அனீஸ்சேகர் ஆலோசனை;
சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை, புள்ளியியல் துறை அமைச்சர் முனைவர் பி. டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்தில், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், எம்.எல்.ஏ.க்கள் கோ தளபதி, புதூர் பூமிநாதன், வெங்கடேசன், மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், மாநகர காவல் துணை ஆணையர்கள் சாய் பிரனீத், அரவிந்த், மங்களேஸ்வரன், ஆறுமுகசாமி, மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாச்சலம், அழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.சித்திரைத் திருவிழாவில், முன்னேறுபாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ்பெற்றவை. இதில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.23-ல் கொடியேற்றம் நடைபெற்றது.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாக்கள் உலகப் புகழ் பெற்றதாகும். சைவத்தையும், வைணவத்தையும் இணைக்கும் விழாக்களாக சித்திரைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. நிகழ்ஆண்டுக்கான மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.23-ம் தேதி (சித்திரை மாதம் 10-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 4-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது.
முக்கிய விழாக்களான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.30-ல் நடைபெறும். மே 1-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திக்குவிஜயம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியான மே 2-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணிமுதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. மறு நாள் மே 3-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் 20 இடங்களில் எல்இடி திரை மூலம் ஒளிபரப்பப்படவுள்ளன. மே 4-ம் தேதியுடன் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது. முக்கிய விழாவான மே 5-ம் தேதி சித்திரை பௌர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.