அரசு பள்ளிகளில் எல்கேஜி., யூகேஜி., வகுப்புகள் தொடர்ந்து நடத்த வேண்டும்: வாசன்
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதுதான் குழந்தைகளின் கல்விக்கு அடித்தளம் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
மழலையர் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று எனவே, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதுதான் குழந்தைகளின் கல்விக்கு அடித்தளம். எனவே, தமிழக அரசு, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு காலதாமதமின்றி நிதியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயவிலைக் கடை தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஆன்லைன் ரம்மி 100% தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து இதை ரத்து செய்ய கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், பல உயிர்கள் போயுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே ,அரசு அவசியமாக, அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை ஆதீனம் பேச்சு குறித்த நிருபர்களின் கேள்விக்கு:
எந்த மதத்தைச் சேர்ந்த குருமார்களாக இருந்தாலும் சரி ஆதீனங்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு என்று பொறுப்பு உள்ளது. அதனை அவர்கள் சரிவர செய்யும் பொழுது அவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. அந்தக் கடமையை அரசு சரிவர செய்ய வேண்டும்.
பாஜக அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு:
எதிர்க்கட்சியை பொருத்தவரை எந்த கட்சியுடனும் விரிசல் ஏற்பட வில்லை அவர் அவர்கள் தங்களுடைய முறையிலேயே ஆளும் கட்சியினுடைய தவறுகளை எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது தான் உண்மை நிலை. எல்லோரும் சேர்ந்து ஒத்த கருத்தோடு தமிழக மக்களுடைய எண்ணங்களை அவரவர் சார்ந்த கட்சியின் மூலம் பிரதிபலிக்கிறார்கள் என்றார்.