மதுரை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு: இருவரிடம் போலீஸார் விசாரணை
சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள சிசிடிவியை பார்த்து குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர்;
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவரை அவனியாபுரம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த மே 6ஆம் தேதி தனது சொந்த வேலையாக மனைவி ஜெயா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார்.
அப்போது சந்தேகம் படும்படி இரண்டு ஆண்கள் ஒரு பெண் ஆகியோர் தனது குடும்பத்தார்களிடம் ஒட்டி உரசி இருந்த தாகவும், பின்னர் அவர்கள் மதுரை மண்டேலா நகர் வந்தவுடன் இறங்கி சென்று விட்டதாகவும் பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது தங்கள் அணிந்திருந்த 12 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். காவல் உதவி ஆணையர் செல்வகுமார் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் விமலா சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள சிசிடிவியை பார்த்தார். ரமேஷ் கொடுத்த அடையாளத்தை வைத்து போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று புகார்தாரர் அடையாளத்தை வைத்து குற்றவாளிகள் இருவரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் அழகர் கோவில் அப்பன்திருப்பதியை அடுத்துள்ள தொப்புளாம்பட்டியைச் சேர்ந்த ராஜு என்பவரின் மகன் முருகேசன் (48) அலங்காநல்லூரை அடுத்துள்ள ஆதனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாண்டித்துரை (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 12 பவுன் நகையை போலீசார் கைப்பற்றினர்.