ஜல்லிக்கட்டு பயிற்சிக்கு தடை; போலீசார் எச்சரிக்கை
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேதி அறிவித்தால் மட்டுமே பயிற்சியில் ஈடுபட வேண்டும் என காவல் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்டது அவனியாபுரம். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் பொது இடங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியின் போது ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்களுக்கு தலையில் அரிவாள் வெட்டப்பட்டு பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பரங்குன்ற சரக உதவி ஆணையர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேதி அறிவிக்கப்படும் போது மட்டுமே, காவல்துறையின் உரிய அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவனியாபுரம் பகுதியில் உள்ள பொது இடங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பயிற்சி செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி செயல்படுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு ப் பதிவு செய்து, ஜல்லிக்கட்டு காளைகளை பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ,சம்பவம் நடந்த அவனியாபுரம் பகுதிகளில் போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து தெருத்தெருவாக சென்று ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், மாடுபிடி வீரர்கள் என அனைவருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு செய்து வருகின்றனர்.
காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து அமைதி உருவாக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உதவி காவல் ஆணையர் சண்முகம் கேட்டுக் கொண்டார்.