தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன: அமைச்சர் தகவல்
போக்குவரத்து துறை ஏற்கனவே 48,154 கோடி நஷ்டத்தில் செயல்படுகிறது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்;
தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் ஏற்கெனவே 48,154 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:ஒமைக்ரான் தொற்றை பொருத்தவரையில் அதனுடைய பரவல் அதிகமாக இருந்தாலும், பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும் என்று மருத்துவ வல்லுனர்கல் கூறியுள்ளனர். இதைக்கட்டுப்படுத்த முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதனால், கொரோனா பற்றி பயப்பட வேண்டிய அவசியமில்லை.
தீபாவளி பண்டிகையின்போது, செய்தது போலவே தனித்தனியே ஒவ்வொரு பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் விடப்படும். எனவே கூட்ட நெரிசல் இருக்காது. கொரோனா பரவலுக்கு வாய்ப்பு இருக்காது.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முகக்கவசம் அணிய வேண்டும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதை அனைவரும் பின்பற்ற நடந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் வர உள்ளது பொங்கல் பண்டிகை உள்ளது .அது மட்டுமின்றி உயர் நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ள வழக்கு ஒன்று உள்ளது இது எல்லாம் முடிவுக்கு வந்த உடன் நடவடிக்கை புதிய பேருந்துகள் வாங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, சென்னை மாநகரில் 2500 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள பணிமனைகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விகிதாச்சார அடிப்படையில் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வரின் ஆலோசனைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
போக்குவரத்து துறை ஏற்கெனவே 48,154 கோடி நஷ்டத்தில்தான் இருக்கிறது.. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிற்சங்க கூட்டங்கள் மூன்று வருடத்திற்கு முன்பு நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை தற்போதுதான் நடைபெற்று உள்ளது. சம்பள பற்றாக்குறை குறித்து தொழிலாளர்கள் அனைவரின் அனைத்து கோரிக்கையும் கேட்டுள்ளோம் இதுகுறித்து, முதலமைச்சருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி நல்லதொரு தீர்வு எட்டப்படும் என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.