சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்: மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா?
மதுரை நகர் முழுவதும் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்;
கோடைமழை காரணமாக மதுரையின் பிரதான சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்தின் முன் சக்கரம் சிக்கிக் கொண்டதால் ஊழியர்கள் சிரமப்பட்டு மீட்டனர்.
மதுரையில் நேற்று மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை மாநகர் பகுதிகளான, மதுரை பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மேலமாசி வீதி, சிம்மக்கல், ஆரப்பாளையம், காளவாசல் பைபாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது .
மேலும் பலத்த மழை காரணமாக மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், கொந்தகையிலிருந்து- மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி வந்து மகளிர் இலவச அரசு பேருந்து பெரியார் நிலையம் பிரதான சாலையில் தோண்டப்பட்டு சரிவர மூடாமல் இருந்த பள்ளத்தில், பேருந்தின் முன் சக்கரம் சிக்கி விபத்திற்கு உள்ளானது. அதிருஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்த வித சேதமும் இல்லாமல் உயிர் தப்பினர். இதனை அடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் மீட்பு வாகன உதவி கொண்டு பேருந்தை பள்ளத்திலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மதுரை நகர் முழுவதும் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.