மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: மதுரை மேயர் வழங்கல்
விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்
நீண்ட தொலைவில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவ- மாணவியருக்கு உதவும் விதமாக தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசின் உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பாடம் பயிலத் தொடங்கினர். கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டதால் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தடைபட்டது.
இந்நிலையில், மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள , நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த ஜூலை மாதம் தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு ரூ. 323.03 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது
மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள், எண்ணும் எழுத்தும் பயிற்சி மற்றும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்,மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இளங்கோ மாநகராட்சி பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காக்கைபாடினார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி, கம்பர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மொத்தம் 1573 மாணவ, மாணவிகளுக்கு கடந்த மாதங்களில் வழங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் பயிலும் 116 மாணவ, மாணவிகளுக்கும், பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 215 மாணவிகளுக்கும், பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 107 மாணவ, மாணவிகளுக்கு என , மொத்தம் 438 மாணவ, மாணவிகளுக்கு மேயர், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில்துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத்தலைவர்கள் பாண்டிச்செல்வி, சரவணபுவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.