சென்னையில் இறந்த 5 அர்ச்சகர்களுக்காக மதுரையில் பிரார்த்தனை
சென்னையில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் பிரார்த்தனை செய்யப்பட்டது;
மதுரையில், அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் சென்னையில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.
சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரை எஸ் எஸ் காலனி பகுதியில் உள்ள அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில் அட்சயா டிரஸ்ட்டின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் காஞ்சி மகாபெரியவர் சன்னதியில் வைத்து சென்னையில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை ஆலந்தூரில் உள்ள நங்கநல்லூரில் பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத்தை ஒட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக, தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உற்சவ மூர்ததிகளையும், அபிஷேகப் பொருட்களையும் நீரில் 3 முறை மூழ்கடித்து எடுத்து செல்வார்கள். இந்தப் பணிகளில் அர்ச்சகர்கள் ஈடுபடுவர். அந்த வகையில், இன்று காலையும் கோயில் அருகே உள்ள மூவசரம்பட்டு குளத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் இறங்கினர். பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் அபிஷேக பொருட்களுடன் அவர்கள் இடுப்பளவு உள்ள நீரில் மூழ்கினர். இரண்டு முறை எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவர்கள் மூழ்கி எழுந்தனர். மூன்றாவது முறையாக மூழ்கிய போது, அர்ச்சகர் ஒருவரின் கால், குளத்தில் உள்ள சேற்றில் சிக்கியது.
சேற்றில் கால் நன்றாக சிக்கிக் கொண்டதால் அவர் நிலைத்தடுமாறி குளத்தில் விழுந்து தத்தளித்தார். இதை பார்த்த மற்ற அர்ச்சகர்கள், என்ன ஆனது எனத் தெரியாமல் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களும் அங்கிருந்த சேற்றில் சிக்கினர். இவ்வாறு 5 இளம் அர்ச்சகர்கள் சேற்றில் சிக்கிக்கொண்டு தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். எவ்வளவு முயன்றும் மற்ற அர்ச்சகர்களால் அவர்களை வெளியே இழுக்க முடியவில்லை. இதனால் ஒரு சில நிமிடங்களிலேயே 5 அர்ச்சகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.