மதுரை அருகே நிலையூர் கண்மாய்க்கு கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை!
மதுரை அருகே நிலையூர் கண்மாய்க்கு கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலையூர் கண்மாயில் கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை; மழை பெய்தும் 2,800 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கும் சூழலால் வருத்தம்:
மதுரை:
மதுரை மாவட்டத்தில் பெரிய கண்மாயாக நிலையூர் கண்மாய் உள்ளது. சுமார் 1300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 2,800 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றனர். கடந்த காலங்களில் பருவமழை பெய்தது காரணமாக, தற்போது கண்மாய் வறண்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில், தற்போது வைகை அணையில் இருந்து நிலையூர் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறை சார்பில் மூன்று நாட்களுக்கு மட்டுமே இந்த தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கண்மாயில் தண்ணீர் இல்லாத நிலையில் மூன்று நாட்கள் மட்டுமே திறந்தால் ஒருபோக விவசாயம் கூட செய்ய முடியாது.
மூன்று நாட்கள் போக கூடுதல் தண்ணீர் திறக்காவிட்டால் பல்லாயிரக்கணக்கான இயக்க நிலங்கள் தண்ணீர் இல்லாமல் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, நிலையூர் கண்மாய் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள நிலையில், தற்போது குறைந்த அளவு தண்ணீர் திறக்கும் பட்சத்தில் தங்களால் விவசாயம் செய்ய முடியாது என்று நிலையூர் பகுதி விவசாயிகள், நிலையூர் பாசன விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் பூமி பாலகன் தலைமையில், சேகர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிடம், கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்படும் என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உறுதி அளித்தார். மழை பெய்து வைகை அணையில் தண்ணீர் இருந்தும் கூட, கூடுதலாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால் 2,800 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் கருகும் சூழல் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.