‘பொய் பிரச்சாரம் மூலம் எடப்பாடியை வீழ்த்த முடியாது’ அ.தி.மு.க. எம்.எல்.ஏ
‘பொய் பிரச்சாரம் மூலம் எடப்பாடியை வீழ்த்த முடியாது’ என அ.தி.மு.க. எம்.எல்.ஏ நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.;
தவறான செய்தியை பரப்பி எடப்பாடியை வீழ்த்த முடியாது.நிச்சயம் எடப்பாடி முதல்வர் ஆவார்.அதை யாராலும் தடுக்க முடியாது என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
மதுரை அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட ராஜன் செல்லப்பா ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் பூர்த்தி செய்யப்பட்ட நிர்வாகிகளின் பெயர் பட்டியலை பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் பேசுகையில் அவர் கூறியதாவது:-
இறக்க இறக்க தான் பட்டம் உயர உயர பறக்கும், பந்தை அடிக்க அடிக்கத் தான் உயர உயர போகும். அதுதான் அ.தி.மு.க.வின் வரலாறு. 1973-ல் எம்.ஜி.ஆரை உசிலம்பட்டியில் பேசவிடாமல் தடுத்தனர். அதற்கு எம்.ஜி.ஆர். நிச்சயம் பேசுவேன் என்று சவால்விட்டு அடுத்தநாளே விடிய விடிய பேசினார். நேற்று எடப்பாடி பழனிச்சாமி கார் சென்று ஒரு மணிநேரம் கழித்து செருப்பு வீசப்பட்டுள்ளது. அதனை செய்தி நிறுவனங்கள் வேண்டுமென்றே தவறான கருத்துக்களை பரப்பியது. இப்படி தவறான செய்தியை பரப்பி எடப்பாடியை வீழ்த்த முடியாது.நிச்சயம் எடப்பாடி முதல்வர் ஆவார்., அதை யாராலும் தடுக்க முடியாது.
சரியான பூத் கமிட்டி நிர்வாகிகளை மட்டும் நாம் தேர்வு செய்து விட்டால் போதும். அ.தி.மு.க. வெற்றியில் பங்கெடுத்து விடலாம். ஏனென்றால், நமக்கு நீதி, நேர்மை, நியாயம், கொள்கை இருக்கிறது. தி.மு.க.வின் போலி வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச் செல்லலாம்.
நாம் ஆட்சி பெற்றவுடன் மகளிர் உரிமை தொகையை ரூ. 2000 ஆக உயர்த்தி காட்டுவோம். தி.மு.க. எப்போதுமே ஒரே ஒருமுறைதான் ஆட்சிக்கு வரும்., அவர்களது ஆட்சிக் காலத்தை எடுத்துப் பாருங்கள். அ.தி.மு.க. தான் தொடர்ந்து, இரண்டு முறை ஆட்சியை பெற்றுள்ளது. எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோர் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பெற்றுள்ளனர். தமிழகத்தில் இப்போது உள்ள சூழலில் ஒரு முறைக்கு மேல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புகள் இல்லை.
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளேன். ஆனால், இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் எதிர்க்கட்சி என்பதால் பல்வேறு திட்டங்களை வாதாடி போராடி பெற்று தருகிறேன். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பரங்குன்றம் தொகுதியை செழிப்புடன் காணப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.