சோழவந்தானில் ஆன்லைன் வர்த்தகத்தால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு :வணிகர்கள் கவலை..!

சோழவந்தான் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தால் தீபாவளி விற்பனை மந்தமாக இருப்பதாக சோழவந்தான் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2024-10-22 09:39 GMT

ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் ஜவுளிக்கடை 

சோழவந்தான் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தால் தீபாவளி விற்பனை மந்தமாக இருப்பதாக சோழவந்தான் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வேதனை  தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான்:

தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வரஉள்ள நிலையில், மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் ஆன்லைன் விற்பனையால் ஜவுளி கடைகளில் வியாபாரம் மந்த நிலையில் இருப்பதாக உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதனை சுற்றி சுமார் 50 கிராமங்கள் உள்ளன தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சாலைகள் மற்றும் கடைவீதிகள் பொதுமக்கள் இன்றி வெறுச்சோடி காணப்படுகிறது. முக்கியமாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நாளுக்கு 15 நாட்களுக்கு முன்னரே பொதுமக்கள் ஆடைகள் அணிகலன்கள் காலணிகள் என, தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக வருவது வழக்கம். பெரும்பாலாக, மதுரை மாநகரில் அதிக கூட்டம் இருப்பதால் சோழவந்தான் சுற்றி இருக்கும் கிராம மக்கள் சோழவந்தானில் ஆடைகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவது வழக்கம். ஆனால்,இந்த வருடம் தீபாவளிக்கு சில நாட்களிளே உள்ள நிலையில், சோழவந்தான் சாலைகளிலும் கடைகளும் ஆளில்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

இது குறித்து ஜவுளி கடை உரிமையாளர்கள் கூறுகையில் வருடா வருடம் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஜவுளி துணிகளை எடுத்துவிட்டு செல்வார்கள். தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சோழவந்தன் பகுதியில் சாலையில் விலக முடியாத அளவிற்கு கூட்ட நெரிசலாக இருக்கும் ஆனால்,இந்த ஆண்டு இவ்வாறு வெறிச்சோடி காணப்படுவது எங்களுக்கு வருத்தமளிக்கிறது .

தற்போது, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் துணிகளை ஆர்டர் செய்து வீட்டிலேயே பெறுவதால் பெரும்பாலான மக்கள் ஜவுளிக்கடைகளுக்கு வருவதில்லை .இன்று இருக்கும் டெக்னாலஜி உலகத்தில் பல்வேறு நாகரீக பரிமாணத்தில் கிராமப்புற வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இந்த சுற்று வட்டார கிராம மக்களை நம்பித்தான் உள்ளோம். ஆனால், இந்த நேரம் பெரிய அளவில்  வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

Tags:    

Similar News