மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை விரைவாக துவங்க வர்த்தக சங்க தலைவர் கோரிக்கை

மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை விரைவாக துவங்க வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கோரிக்கை விடுத்து பேசி உள்ளார்.;

Update: 2024-02-20 10:42 GMT

தமிழ்நாடு  தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மதுரைக்கு பன்னாட்டு விமான நிலையம், மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசினார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்

மதுரை தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரம். தொழில் வர்த்தகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் அமைப்பு "தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்". 1924ல் "மதுரை இராமநாதபுரம் வர்த்தக சங்கம்" என்ற பெயரில் தொடங்கப்பட்ட இது, 1987ல் தற்போதைய பெயரில் மாற்றம் பெற்று, தமிழகத்தின் முக்கிய தொழில் வர்த்தக அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.

இவர் தான் ஜெகதீசன்

இந்த சங்கத்தின் தற்போதைய தலைவர் என்.ஜெகதீசன். 2010ம் ஆண்டு முதல் தலைமை பொறுப்பை ஏற்று, மதுரை மற்றும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வருகிறார்.

இவர் மதுரையை பிறப்பிடமாக கொண்ட பொறியியல் பட்டதாரி. தொழிலதிபரான இவர் சமூக பணியும் ஆற்றி வருகிறார். 1998ல் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க உறுப்பினராக இணைந்த இவர்  2006ல் துணைத் தலைவர், 2010ல் தலைவர் ஆனார்.

இவர் தலைவராக பொறுப்பேற்ற போது அதாவது  2010ல் 500 இருந்த உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 2000ஐ தாண்டியுள்ளது. மதுரை மற்றும் தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முயற்சிகளில் ஜெகதீசன் முக்கிய பங்கு வகித்துள்ளார். சிறு, குறு தொழில்களுக்கு நிதி உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற திட்டங்கள் மூலம் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளார்.மதுரை மற்றும் தமிழ்நாட்டில் போக்குவரத்து, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.வெள்ள நிவாரணம், மருத்துவ முகாம்கள் போன்ற சமூக சேவை பணிகளில் சங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பிஎம்சி தொடக்க விழா

மதுரையில் பி. எம்.சி. என்ற தொழிற்சார்ந்த அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரவணகுமார் வரவேற்றார். பி. எம். சி. திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி இயக்குனர் கோபிசன் பேசினார். விழாவில், திருச்சி தொழிலதிபர் அருள் மகேஷ் சிறப்புரையாற்றினார்.

பி.எம். சி.தொழில் அமைப்பினை குத்து விளக்கேற்றி, தொடங்கிவீட்டு உறுப்பினர்களுக்கு, பதவிப்பிரமாணம் செய்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் சிறப்புரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது:-

இன்றைய காலகட்டத்தில் தொழில் செய்வது கடினமாக இருக்கிறது. நம்முடைய பொருட்களை விற்பதற்கு கடுமையாக முயற்சி செய்ய வேண்டி உள்ளது. பழைய காலத்தில் பொருள் தேவைப் படுவோர் நம்மை தேடி வருவார்கள். இன்று காலம் மாறிவிட்டது. நாம் டிஜிட்டல் மீடியா உலகத்தில் இருக்கிறோம். நாம் சிரமமான காலகட்டத்தில் இருக்கிறோம். எல்லாத் துறையிலும் வரி கூடிவிட்டது. தொழில் லைசென்ஸ் பதிவு செய்வது உட்பட எல்லாம் சிரமம் ஆகிவிட்டது.

மெட்ரோ ரயில் சேவை

ஒரு தொழில் தொடங்குவதற்கு 27 லைசென்ஸ் வாங்க வேண்டியதாக இருக்கிறது. மதுரைக்கு புதிய திட்டங்கள் வருவதை விட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயற்படுத்தினாலே, போதுமானது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 8,500 கோடி ரூபாய் திட்டம் தயாரிக்கப்பட்டு அதை உடனடியாக அதை செயல் படுத்த வேண்டும். மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் உருவாக வேண்டும். 62 வருடம் ஆகியும் இன்னும் பன்னாட்டு விமான நிலையம் உருவாகாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. மதுரை சுற்றி இருக்கிற எந்த மாவட்டத்திலும் இன்னும்

தரமான தொழிற்சாலைகள் உருவாகவில்லை. உங்களைப் போன்ற இளைஞர்கள் தொழிலை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு எப்படி என்று யோசிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் பேசினார்.

முடிவில், பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News